பக்கம்:நற்றிணை 1.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

237


சிறிய மோதிரம். வாழை ஈர்ந்தடி – வாளையிலிருந்து கிள்ளிக் கொண்ட இலை. வகைஇ - வகுந்து. துகில்தலை – துகிலின் முனை; முந்தானை.

விளக்கம் : விருந்தினரோடு புகுந்த தலைவன், அட்டிற் சாலையிடத்தினின்றும் விருந்தினரை வரவேற்க வந்து திரும்பிய தலைவியைப் பின் தொடர்கிறான். அவனைப் புலந்தாளாகப் புகைபடிந்து சிவந்த கண்களை முந்தானையால் துடைத்தபடியே, அவன் அட்டிலறையுட் புகுந்து கொள்கின்றனள். அப்போது தலைவன் இப்படிக் கூறிக்கொள்கின்றான். தலைவனோடு புலப்பினும் விருந்து பேணுதலாகிய தன் கடமையில் திண்மையுடையளாதலின், அவர் முன்பாக இளமுறுவலுடன் தலைவனை நோக்கினாள் என்க. 'வாளை ஈர்ந்தடி' எனக் கொண்டு, வாளை மீனை அறுத்துத் துண்டுபடுத்தினள் எனவும் கொள்க.

மேற்கோள்: விருந்தோடு புக்கோன் கூற்றுக்கு மேற்கோளாக அகத்திணையியல் 24 ஆம் சூத்திர உரைக்கண் இச் செய்யுளை நச்சினார்க்கினியர் காட்டுவர்.

121. புறவிற்று !

பாடியவர் : ஒருசிறைப் பெரியனார்
திணை : முல்லை.
துறை : வினைமுற்றி மறுத்தரும் தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது.

[(து–வி) வினை முடித்தவனாகத் தேர்மீது அமர்ந்து வருகின்ற தலைவன், தலைவியின் நினைவாற் சோர்வு அடைகின்றான். அவனைத் தேற்றுவானாகப் பாகன் உரைப்பது போல அமைந்த செய்யுள் இது]

விதையர் கொன்ற முதையல் பூமி
இடுமுறை நிரப்பிய ஈர்இலை வரகின்
கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை
அரலைஅம் காட்டு இரலையொடு வதியும்
புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே; 5
'எல்லிவிட் டன்று வேந்து' எனச் சொல்லுபு
பரியல்; வாழ்க நின் கண்ணி! காண்வர
விரியுளைப் பொலிந்த வீங்குசெலற் கலிமா
வண்பரி தயங்க எழீஇத், தண்பெயற்
கான்யாற்று இகுமணற் கரைபிறக்கு ஓழிய 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/238&oldid=1690787" இலிருந்து மீள்விக்கப்பட்டது