பக்கம்:நற்றிணை 1.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

253


செந்நீர்ப் பொதுவினைச் செம்மல் மூதூர்த்
தமதுசெய் வாழ்க்கையின் இனியது உண்டோ? 5
எனை விருப் புடையர் ஆயினும் நினைவிலர்
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும்
வாடிய வரியும் நோக்கி, நீடாது
எவன்செய் தனள்;இப் பேர்அஞர் உறுவி?' என்று
ஒருநாள் கூறின்று மிலரே; விரிநீர் 10
வையக வரையளவு இறந்த
எவ்வ நோய்பிறிது உயவுத்திணை இன்றே.

மடித்துப் போர்த்த தோலாகிய முகப்பையுடைய தெளிவான ஓசைகொண்ட தண்ணுமையானது நடுநடுவே ஆர்ப்பரிக்கக், குற்றமின்றி எல்லா நல்லிலக்கணமும் நிரம்பிய குதிரைகள் பூட்டிய தேரிலேறியமர்ந்து, குதிரைகளைக் கோலால் எறிந்து செலுத்தியபடி, நாட்காலையிலே நம் இல்லின் புறத்தேயும் தோன்றினார் அவர். செவ்விய நீர்மை கொண்ட பொது நன்மைக்கான செயலைச் செய்யும் தலைவராகிய அவர்க்கு, இம்மூதூரிடத்தே தமதாகச் செய்யும் இல்வாழ்க்கையினுங் காட்டில் இனியதொரு பொருளும் உண்டாகுமோ? நம்பால் எவ்வளவோ விருப்புடையவர் ஆயினும், அவர் அந்த நினைவே இல்லாதாராயினர. அவரையே துணையாக வரித்த என் நெஞ்சத்து உறுதியையும், பிரிவால் நெகிழ்ந்துபோன என் தோள்களையும், என் வாடிய மேனியின் இரேகைகளையும் நோக்கி நீட்டியாது, விரையத் திரும்பி வந்தவராய், 'இப் பெரும் துன்பத்தினை அடைந்தவள் என்ன காரியத்தைச் செய்தனள்?' என்று ஒரு நாளேனும் இரக்கத்தோடு கூறினவரும் அல்லர். விரிந்த கடலால் சூழப்பெற்றுள்ள வையத்தின் எல்லையளவுக்கும் கடந்துபோயினதான இத் துன்ப நோய்க்குப், பிறிதாக அமையும் உசாவுத் துணையாகக் கூடியதும் உலகிடத்து யாதுமில்லையே!

கருத்து : 'அவர் பிரிவை இனியும் தாங்குவதற்கு என்னால் இயலாது' என்பதாம்.

சொற்பொருள் : வடு – குற்றம்; குதிரைகட்குக் கூறப்படும். தீய மச்சக்குறிகளும் ஆம். மான் – குதிரை. தெண் – தெளிந்த, நடுவண் – இடையிடையே கோல் – குதிரையைச் செலுத்தும் தாற்றுக்கோல். செந்நீர்ப் பொதுவினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/254&oldid=1692341" இலிருந்து மீள்விக்கப்பட்டது