பக்கம்:நற்றிணை 1.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

259


தோய்த்துத் தெளித்த சிலவாகிய நீர்த்துளிகளைப் போலக், காமநோய் மிகுந்த என் தெஞ்சிற்குச் சிறிதளவு பாதுகாவலாய் இராநின்றது காண்!'

கருத்து :'நின் பேச்சுச் சிறிது ஆறுதல் தருகின்றது; அவரை அடைந்தாலன்றி என்னுறு நோய்தான் நீங்காது' என்பதாம்.

சொற்பொருள் : 'தொடி – தோள் வளை. கொட்பு ஆனா – சுழன்று சுழலுதலின் நீங்கிற்றில. வடி – மாவடுவின் பிளப்பு, பசலை – பசலைநோய். திதலை – தித்தி; தேமற் புள்ளிகள். ஐம்பால் – ஐவகையாகப் பகுத்து முடிக்கப்பெறும் கூந்தல். மாயோள் – மாமை நிறத்தை உடையாள்; கரு – நிறத்தை உடையாளும் ஆம். கெளவை – பழிச்சொற்கள்

விளக்கம் : 'கொல்லனது உலைச்சூடானது, பனைமடலில் தோய்த்துத் தெளிக்கும் சிலநீராற் சிறிததளவேனும் தணிவது போலத், தலைவரின் பிரிவினாலே உற்ற காமநோயானும் ஊர்ப்பெண்டிரது பழிச்சொற்களானும் கொதிப்படைந்த என் நெஞ்சிற்கு நின் ஆறுதலுரைகள் சிறிது ஆறுதலைத்தருகின்றன' என்கின்றாள் தலைவி. தோழியின் அன்புறு கிளவியைப் பாராட்டினாலும், தலைவர் வந்தடைந்து ஊரவரது பழிச்சொற்களும் நிற்குங் காலத்தேதான் தன்மனம் முற்றவும் அமைதியடையும் எனவும் குறிப்பாகத் தன் நிலையினைப் புலப்படுத்துகின்றாள்

மேற்கோள் : 'தோழி கூற்றினை நன்கு மதியாது கூறினள்' எனத் தொல்காப்பியக் களவியல் இருபதாம் சூத்திர உரையுள் நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுவர். 'நன்கு மதியாமை', சொல்லிய உவமானத்தால் புலப்படுகின்றது.

134. இனிது தலைப்படும்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி.
துறை : 'இற்செறிப்பார் என ஆற்றாளாய தலைவியை, 'அஃதிலார்' என்பதுபடத் தோழி சொல்லியது.

[(து–வி) தலைவன் பிரிவு நீட்டிக்கத் தலைவியின் மேனி வேறுபாடு அடைகின்றது அதனைத் தாய் அறிந்து இற்செறிப்பாளோ எனத் தவைவி அஞ்சுகின்றபோது, அவ்வாறு செறிப்பாரிலர் எனத் தோழி கூறுவதாக அமைந்தது இதுவாகும்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/260&oldid=1692761" இலிருந்து மீள்விக்கப்பட்டது