பக்கம்:நற்றிணை 1.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

265


ஒன்றனை நீதான் அடைந்தனை ஆவாய். அங்ஙனம் அடைந்த அதனோடேயே நீயும் சென்று இனி வாழ்வாயாக!

கருத்து : 'நீ விரும்பும் பொருள் தான் இவளினும் சிறந்தது அன்று' என்பதாம்.

சொற்பொருள் : செல்வரை – செவ்விய மலை: செங்குத்தான மலை. ஆன்ற நீர் – அமைந்த நீர், சூழ்ந்தனை – கருதினை. கயந்தலை – மென்மை கொண்ட தலை. ஓமை – ஓமை மரம். அல்குதல் – தங்குதல். வல்லிய –வன்மையுற்ற.

விளக்கம் : ஒன்றை இழக்கத் துணிவதென்றால், அதனினும் சிறந்த மற்றொன்றை அடைதல் வேண்டும். தலைவியை நீத்துச் செல்லத் துணியும் நீயோ, அருவிகள் நீரொழிந்தவையாகத் தோற்றுவதும், ஓமையின் புள்ளி நீழலன்றி நறுநிழல் இல்லாதிருப்பதும், கடத்ததற்கரியதும், களிறுகளை உடையதுமான காட்டுவழியினைக் காட்டுகின்றாய். இவளை விட்டுப் பெறுவன அவையாயின், யாம் அவற்றை விரும்பேம். நீயே சென்று பெறுக. இப்படிச் சொல்லுவதாக அமைத்துக்காண்க.

தண்ணிய கமழும் தாழிருங் கூந்தற்குச் செவ்வரை ஆன்ற நீரில் அருவிதான் இணையாமோ? தடமென் பணைத்தோளின் இனிமைக்கு முடத்தாள் ஓமையின் நிழல்தான் ஒப்பாமோ? அந்த நிழலும் பிடியின் பசியைப் போக்கக் களிறு சிதைத்த மரத்து நிழலாக, அதன் பாசத்துச் செவ்வி தலைவியை விட்டுப் பிரிந்து வருத்தத்திற்கு உட்படுத்திய பொருந்தாச் செயலை நினைவூட்டுமன்றோ? இப்படியெல்லாம் கேட்பதாகவும் தொடர்புபடுத்திக் கருதுக.

உள்ளுறை : 'மடப்பிடியது துயரைப் போக்குதற்கு ஓமையை முறித்து உண்ணத் தருகின்ற களிற்றது பெருந்தன்மை போல, நாமும் பெருந்தன்மை கொள்வதற்கு மாறாக, நாமே அவட்கு வருத்தத்தை உறுவிப்பது எவ்வளவு பொருத்தமற்றது', என்பதாம். 'நீரற்ற அருவிபோலவும், நிழலற்ற கானம்போலவும், அவளும் தன் நலனிழந்தஉயிர் கெடுவாள்' என்பதுமாம்.

138. கண்ணறிவு!

பாடியவர் : அம்மூவனார்.
திணை : நெய்தல்.
துறை : அலராயிற்றென ஆற்றாளாய தலைமகளுக்குத் தலைவன் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது.


ந.—17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/266&oldid=1692769" இலிருந்து மீள்விக்கப்பட்டது