பக்கம்:நற்றிணை 1.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

267


முழங்கும் திரையொலியும் சேர்ந்துபரவிநிற்கும் ஆரவாரத்தையுடைய இவ்வூர் மகளிர், பிறிதொன்றனையும் கண்டு அறிந்தவர் அல்லர்காண்!

கருத்து : அங்ஙனமாகவும் தான் வருத்தமுறுவதுதான் எதற்காகவோ?' என்பதாம்.

சொற்பொருள் : குன்றுபோல் குப்பை – குன்றைப்போலத் தோற்றும் உப்புக் குவியல்கள். உயங்குவயின் ஒழித்த - வண்டி முறிந்தவிடத்துப் போட்டுப் போயின; பசி வருத்திய விடத்து உணவாக்கி உண்டுவிட்டுக் கழித்துப்போயின அடுப்பும் பிறவும் எனலும் ஆம். பண் – பண்பு; அது அழிதல், மாறித் தோன்றுதல். குருகு ஈனுதல் – குருகு முட்டையிட்டிருத்தல். பாசடை – பசிய இலை. நெறிதருதல் – நெறிப்பைத் தருதல். நெறிப்பு – சுருளுதல். தொடலை – தழை மாலை. கண் அறிவு – காட்சியறிவு. விழவு – துணங்கை; கடற்றெய்வத்தைப் பராவும் வும் விழவும் ஆம்.

உள்ளுறை : உமணர் ஒழித்த பழம்பாரிலே குருகு சினை ஈனும் என்பதுபோலத் தலைவனால் நலனுண்டு கழிக்கப்பட்டு அழகிழந்த தலைவியின் மேனியிலே பசலை நோய் பற்றிப் படரும் என்பதாம்.

இறைச்சி : 'தாளவறுதி அலையோசையோடு சேர்ந்து பரவும் ஆரவாரத்தையுடைய ஊர்' என்றது, அவ்வாறே பழிச்சொற்களும் எழுந்து பரவுதல் உற்றது என்பதாம்.

விளக்கம் : இதனைக் கேட்டலுறும் தலைவன், தொடலை கண்டு பழித்த அலகுரைக்கே பெரிதும் வருந்தும் இவள், களவுக்கூட்டத்தைப் பற்றி ஊர் பழிக்கத் தொடங்கிற்றாயின் செத்தொழிவாளோ எனக் கலங்குவான். அதனால் விரைவிலே அவளை ஊரறிய மணந்து பெறுகின்ற இன்பத்திலே கருத்தினனாவான் என்பதாம். நலனழிந்த தலைவியது எழிலுக்குப் 'பண்ணழி பழம்பார்' சிறந்த உவமையாகும்.

139. பொருந்தி உலாவுக!

பாடியவர் : பெருங் கௌசிகனார்.
திணை : முல்லை.
துறை : தலைவன், வினைமுற்றி வந்த பள்ளியிடத்தானாகப் பெய்த மழையை வாழ்த்தியது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/268&oldid=1714833" இலிருந்து மீள்விக்கப்பட்டது