பக்கம்:நற்றிணை 1.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

273


(புறம் 385). இவளைக் கூடிப்பெறுகின்ற இல்லறஇன்பத்தை விட்டுச் சென்று துறவறத்தை மேற்கொள்ளத் தூண்டுவையோ' என்பவன், காட்டிடத்துக் கொன்றை மரங்களின் தோற்றம் தவசியரைப் போன்றிருக்கும் என்கின்றான். நீரற்ற காட்டுக் கொடுவறட்சியைக் கூறுவான், யானை இருஞ்சேறு ஆடிய தென்கின்றான். 'எளியமன் நினக்கே' என்றது, நினக்கே எளிதாயின் நீதான் செல்க என, அயன்மை தோன்றக் கூறியதாம்.

142. ஊர் புறவினது!

பாடியவர் : இடைக்காடனார்.
திணை : முல்லை.
துறை : வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

[(து–வி) வினை முடித்து வீடு திரும்பலுறும் தலைமகன், தலைமகளை விரையச் சென்று சாணும் ஆர்வமானது மிகுதியாக எழுந்து வருத்தத், தேர்ப்பாகனிடம் கூறுவதாக அமைந்தது.]

வான் இகுபு சொரிந்த வயங்குபெயற் கடைநாள்
பாணி கொண்ட பல்கால் மெல்லுறி
ஞெலிகோல் கலப்பை அதளொடு சுருக்கிப்
பறிப்புறத்து இட்ட பால்நொடை இடையன்
நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்பத் 5
தண்டுகால் வைத்த ஒடுங்குநிலை மடிவிளி
சிறுதலைத் தொழுதி ஏமார்த்து அல்கும்
புறவினதுவே—பொய்யா யாணர்
அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின் 10
மெல்லியற் குறுமகள் உறைவின் ஊரே.

இரவுப் பொழுதாகவே இருந்தபோதிலும், விருந்தினர் வந்தனராயின் அவரை உபசரிக்கும் வாய்ப்பு நேர்ந்தமைக்கு உவப்படைபவள்: இல்லிலிருந்து நல்லறம் பேணும் கற்புச் செவ்வியையுடையவள்; மென்மையான சாயலையும் உடையவள் என் தலைவியாகிய இளமகள்! அவள் தங்கியிருக்கும் இனிதான, ஊராவது, என்றும் பொய்ப்படாத புதுவருவாயினை மிகுதியாக உடையதாகும். அதுதான்—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/274&oldid=1693357" இலிருந்து மீள்விக்கப்பட்டது