பக்கம்:நற்றிணை 1.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

நற்றிணை தெளிவுரை


ரான அலருரைக்கும் வாயினரான பெண்டிர்கள் பலரும் ஒருங்கே கூடிநின்றாராய்ச் சொல்லியபடியிருந்த கொடிதான இனிய பேச்சையும் கேட்டிருந்தேன். கேட்டதன்பின் சில நாட்களளவும் யாதும் அறியாதேன்போல மூச்சுவிடாதாளாகவும் இருந்தேன். பின்னும் அவர்தான் மிகுதியாக, 'மகளே! நின் கூந்தல் யானூட்டும் மணத்தையன்றி மேலும் புதிதான நறுமணத்தையும் கமழ்வதாக இருக்கின்றதே! அதுதான் எதனாலோ?' என்று அவளை வினாவினேன். அதற்கே அவள், தன்னுறவினை யானறிந்தமையை உணர்ந்தாளாய்த், தன் காதலனுடன் சென்றுவிட்டனள். அவள் கொண்ட காமந்தான் மிகவும் வியப்புடையது!

கருத்து : 'அவளுக்கு யானே அவனை மணமுடித்து வைத்தற்கான ஏற்பாடுகளைச் செய்தேனில்லையே' என்பதாம்.

சொற்பொருள் : ஐது – வியப்புக்குரியது. ஒய்யென – விரைய. தருமணல் – கொணர்ந்திட்ட மணல். ஞெமிர்தல் – பரவுதல். நகர் - மாளிகை. ஓரை – மகளிர் விளையாட்டுள் ஒன்று.

விளக்கம் : 'காமம் ஐது' என வியந்தது, பிறந்து வளர்ந்த வீட்டையும், பழகிய தோழியரையும், வளர்த்த கிளியுைம் விட்டுநீங்கிப் புதுவனாகிய ஒருவனுடன் செல்லற்குத் துணிவுதந்த சிறப்பினால். ஆயமகளிர் அவளது

பேரைச் சொல்லி அழைக்கத் தாய் அவ்விடத்தை நோக்கி, அகன்று போகிய தன் மகளை நினைந்து அழுதலைத் தொடங்குகின்றாள். அவள் பேரைக் கேட்டதும், அவள் வளர்த்த கிளியானது தாயினும் விரைவாக அவளை அழைத்துக் கூவத்தொடங்குகின்றது. தாயின் மனம் அலருரையால் தலைவியது களவு உறவை அறிந்திருந்தும், அதுகுறித்துத் தான் ஏதும் செய்யாதிருந்த தன் அறியாமையை நினைந்தும், தலைவியது அறம் பேணும் உறுதியை வியந்தும் இப்படி மருள்கின்றது. இன்னா இன் உரை என்றது, அவருரை கூறுவாரது நோக்கம் இன்னா தாயினும் அதுதான் தன் மகளது வாழ்வுபற்றிய இனிய செய்தியையே அறிவித்தவால், தனக்கு இனிதாகவும் இருந்தது என்பதனால். 'கதுப்பு நறிய நாறும்' என்றது, தலைமகன் தன் நாட்டிடத்து மலரினைக் கொணர்ந்து சூட்டியதனைக் குறித்து வினவியதாம். அம் மலர் தலைவியின் ஊரிடத்து இல்லாததென்பதும் அறியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/277&oldid=1693767" இலிருந்து மீள்விக்கப்பட்டது