பக்கம்:நற்றிணை 1.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

நற்றிணை தெளிவுரை


யிருப்பேன். 'இரவின் வாராதே கொள்' என அவர்க்குக் கூறாத என் அறியாமையினாலேதான் என் நிலைமை இங்கு இவ்வாறாயிற்று!

கருத்து : 'அவர் வரும் வழியை நினைந்து அதன் கொடுமைக்கு நடுங்கிக் கலங்குவேன்' என்பதாம்.

சொற்பொருள் : கருவி மா மழை – தொகுதி கொண்ட கார்மேகம். அரவம் – மழையது இடியொலி. போது – நீலப்போது. கவிழ்தல் – கலங்குதல். கவலை கவற்ற - கவலையாற் சுழற்சி கொள்ள. பிணவுப் புலி – பெட்டைப்புலி, பகுவாய் – பிளந்த வாய், பசிக்கு உணவுதேடித் திரியும் கொடுமையைச் சுட்டியது. குட்டம் – ஆழம். அறல் – நீர் ; புது வெள்ளமாதலின் அறல்பட்ட மணலது தோற்றத்தை உடைத்தாயிருந்தது.

விளக்கம் : 'விரவு மலர் பொறித்த தோளர்' என்றது, அவன் மார்பிடத்து விளங்கிய பன்மலர்களானே, அவன் காட்டாற்றையும் நீந்திக் கடந்தவந்த துணிவுச் செயலை அறிந்து, அதற்குக் குறிநேர்தலே காரணமாயினதனால் அதற்கிசைந்த தன் பேதைமைக்கு வருந்தித் தலைவி கூறுவதாகும்! காட்டிய கண் கலுழ்தல் இயல்பேனும், யாதுமறியாத நெஞ்சத்தும் கவலை சூழ்கின்றதுதான் எதனாலோ? எனச் சோர்கின்றாள், இரவுக்குறி வருதலின் ஏதமிகுதியை உணராதிருந்த 'அவளுக்குக்' களிற்றைப் புலி தாக்கக்கண்டு நடுங்கிப் பெருங்குரலெடுத்துப் பிளிறிய பிடியின் குரலும், காட்டாற்றை நீந்திவந்த தலைவனின் துணிவுச் செயலும் அச்சத்தை எழுப்பின என்று கொள்க. இதுபற்றியே, 'அறியாதேற்கே' என்கின்றனள்.

உள்ளுறை : 'புவியால் தாக்கப்படும் களிற்றது நிலைக்கு நடுங்கிப் பெருங்குரல் எடுத்துப் புலம்பும் பிடி' என்றது, இவ்வாறே தலைவனுக்கு வழியிடையே ஓர் இடையூறாயின் தானும் கலங்கிப் புலம்பும் தன்மையினள் என்று உணர்த்துதற்காம். 'இதனால், தலைவன் இரவுக்குறி வருதலைக் கைவிட்டானாகித் தலைவியை வரைந்து கொள்ளுதலிலே மனஞ் செலுத்துவானாவன்' என்பதாம்.

ஒப்பு : 'இரவுக்குறி வரின் ஊனும் அஞ்சுவல்' எனும் குறுந்தொகைச் செய்யுளடியும் (குறுந்: 216,22) இவ்வாறு தலைவியர் அஞ்சுதலை உணர்த்தும். புலியும் களிறும் தம்முள் எதிருற்ற ஞான்று பொருதும் இயல்பின. களிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/279&oldid=1693769" இலிருந்து மீள்விக்கப்பட்டது