பக்கம்:நற்றிணை 1.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியைத் தாக்குதல் 'சிறுகட் பெருங் களிறு வயப்புலிதாக்கி' (குறு 88.2) என்பதனால் அறியப்படும். புலி களிற்றை அடப் பிடிபுலம்பும் என்பது, 'குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை, பூநுதல் இரும்பிடர் புலம்பத் தாக்கித், தாழ்நீர் நனத்தலைப் பெருங்களிறு அடுஉம்' எனவரும் சீத்தலை சாத்தனாரின் வாக்காலும் அறியப்படும் (நற்:361–3).

145. என் செய்வேன்?

பாடியவர் : நம்பி குட்டுவன்.
திணை : நெய்தல்.
துறை : இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி வரைவு கடாயது.

[(து–வி.) தலைவன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாகுதலை அறித்த தோழி, இவ்வாறு தலைவிக்குக் கூறுவதன் மூலம் விரைவிலே தலைவியை மணந்துகொள்ளுதற்குத் தலைவனைத் தூண்டுதற்கு முற்படுகின்றாள்.]

இருங்கழி பொருத ஈர வெண்மணல்
மாக்கொடி அடும்பின் மாஇதழ் அலரி
கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும்
காமர் கொண்கன் நாமவெங் கேண்மை
ஐதுஏய்ந் தில்லா ஊங்கும் நம்மொடு 5
புணர்ந்தனன் போல உணரக் கூறித்
'தான் யாங்கு'? என்னும் அறன்இல் அன்னை
யான்எழில் அறிதலும் உரியள், நீயும்; நம்
பராரைப் புன்னைச் சேரி மெல்ல
நள்ளென் கங்குலும் வருமரோ 10
அம்ம வாழி! அவர் தேர்மணிக் குரலே!

தோழி! நெடிது வாழ்வாயாக! கண்டவர் விருப்பமுறும்தகைமை உடையோன் நம் காதலன். கரிய கழியிடத்து நீர் மோதுதலானே ஈரமாகிய வெண்மணலிடத்தே படர்ந்திருக்கும் பெருங் கொடிகளையுடையது அடும்பு. அதன் பெரிய பூவிதழ்களைக் கொய்து கொணர்ந்து மகளிரது கூந்தலிடத்தே சூட்டலுறும் தலைமாலைக்கு அணிகூட்டும் தன்மையாளன் அவனாவான். அவனுடைய அச்சந்தரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/280&oldid=1693770" இலிருந்து மீள்விக்கப்பட்டது