பக்கம்:நற்றிணை 1.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286

நற்றிணை தெளிவுரை


போதலையும் செய்வார். நெடிதான பொய்கையிடத்தும் பொருந்திய நீரில்லாதாய்க் காணப்படும் நெடிதான சுரநெறியிலே, சிவப்பான அடிமரத்தையுடைய மராவினது அழகிய பக்கத்திலே பொருந்தியிருந்தபடி, வழிவருவாரின் வருகையினை எதிர்பார்த்தபடியாக, வளைந்த வில்லினைக் கையிடத்தே கொண்டோரான ஆறலை கள்வர்கள் மிகுதியாயிருப்பர். அவர்கட்கும் அவர் அஞ்சமாட்டார். மலைக் குகையிலே சேர்ந்து கிடந்த பெரிதான நகங்களையுடைய தன் பெண்புலியானது இனிதான குட்டிகளை ஈன்றதனாலே கொண்ட நோயும் பசியும் தீரும் பொருட்டாகச், சினமிகுதியாற் சிவந்த கண்களைக் கொண்டதும், வேட்டை கொள்ளுதலிலே வல்லமையுடையதுமாகிய பெரிதான ஆண் புலியானது. உயர்ந்த கொம்புகளைக் கொண்ட களிற்றது புள்ளிகளையுடைய மத்தகத்தே பாய்ந்து அதனைக் கொல்லும். அத்தன்மைத்தானதும் கடத்தற்கு அரிதானதுமான சுரநெறியையும், 'இன்றைக்கே யாம் கடந்து செல்வேம்' எனவும் கூறுவார். இதற்காகவும் யான் வருந்தமாட்டேன். 'அவர் சென்று முயலுகின்ற செயல்தான் இனிதாக வாய்ப்பதாகுக' என்று வாழ்த்தி, அவரை வழியனுப்பிவைத்து, அவரைப் பிரிந்த துன்பத்தையும் தாங்கிப் பொறுத்திருப்பேன்.

கருத்து : 'இல்லத் தலைவியான நீயும் பிரிவைப் பொறுத்து ஆற்றியிருத்தலே கடமையாகும்' என்பதாம்.

சொற்பொருள் : 'வண்ணம்' என்பது தலைவியின் இயல்பான நிறத்தையும், புனைவால் அமைகின்ற வண்ணங்களையும் குறிக்கும். புரிந்த – பொருந்திய. வீங்குநிலை – மிக்கிருக்கின்ற நிலை. ஆள்வினை – முயற்சி; ஆணின் செயலாதலின் ஆள்வினை என்றனர். கயம் – ஆழமான குளம். கல்லளை –மலைக்குகை; பாறையிடுக்கு. வாங்குசிலை – வளைவான வில். புனிற்று இடும்பை – ஈன்றதன் அணிமை காரணமாக ஏற்படும் நோவு. ஒருத்தல் – களிற்றுத் தலைவன்,

இறைச்சிப் பொருள் : 'பிணவின் புனிற்றிடும்பை தீரப் பெரும்புலி களிற்றைக் கொன்று இழுத்துக்கொண்டு போதலைப்போலத் தலைவனும் இல்லத்து வறுமை அகலப் பொருளினை மிகுதியாக ஈட்டிக்கொண்டு வருவான்' என்பதாம்.

விளக்கம் : 'வண்ணம் நோக்குதல்' பிரிந்தால் அதுதான் வேறுபடுமே என்னும் ஆற்றாமையினால். 'மென்பொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/287&oldid=1693895" இலிருந்து மீள்விக்கப்பட்டது