பக்கம்:நற்றிணை 1.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

287


கூறல்' அவள் மனம் புண்படாவாறாம். நீரற்ற நெடுவழியினை, அதன்கண் மறைந்திருக்கும் ஆறலை கள்வர்க்கும், கொடும்புலிக்கும் அஞ்சாது கடந்துசென்று பொருளீட்டி வருதல், இல்லத்தில் தலைவியுடனிருந்து அதனால் அறம்பல செய்து இன்புறுதற்கே என்று கொள்ளல் வேண்டும். 'வருந்தேன்' என்றது இவ் வுண்மையினை உணர்தலால்.

ஒப்பு : ஆண்புலியைக் 'கோள்வல் ஏற்றை' எனக் குறுந்தொகைச் செய்யுளும் (141), அகநானூற்றுச் செய்யுளும் (171) உரைப்பதனால், புலியின் ஆற்றலை அறியலாம். இவ்வாறே ஆள்வினையை முடித்துவரும் ஆற்றலையுடையவன் தலைவன் என்பதுமாம். 'மராஅம்'– செங்கடம்பு மரம்; முருகன் கோயில் கொள்ளும் மரம்!

149. அலர் சுமந்து ஒழிக!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது; சிறைப்புறமாகச் சொல்லியதூஉமாம்.

[(து–வி.) (1) தலைவனுடன் போய்விடுவதற்குத் தலைவியை வற்புறுத்திக் கூறுவது; (2) சிறைப்புறம் நிற்கும் தலைவன் கேட்டுணர்ந்து மணவினைக்கு விரைதற் பொருட்டுத் தோழி கூறுவது]

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப
அலந்தனென் வாழி தோழி! கானல் 5
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல்
கடுமாப் பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு
செலவுஅயர்ந் திசினால்; யானே;
அலர்சுமந்து ஒழிகஇவ் அழுங்கல் ஊரே! 10

தோழீ, வாழ்வாயாக! நம்மூர்த் தெருக்களிலே, சிலரும் பலருமாகக் கூடி, நின்று தம் கடைக்கண்ணாற் பார்த்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/288&oldid=1693899" இலிருந்து மீள்விக்கப்பட்டது