பக்கம்:நற்றிணை 1.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

நற்றிணை தெளிவுரை


மூக்கின் உச்சியிலே சுட்டுவிரலைச் சேர்த்துக் கொண்டாராகப் பழி தூற்றித் திரிவாவாராயினர். அவரது பழியுரைகளைக் கேட்டறிந்த நம் அன்னையும், சிறுகோல் ஒன்றைக் கைக்கொண்டு சுழற்றியபடியே என்னை. அடிப்பாளாயினள்! இவற்றால் யானும் மிகவும் துயர் உற்றேன். காண்பாயாக! இத் துன்பமெல்லாந் தீரும்படியாக.

கானலிடத்தே விளங்கும் புதுமலர்களைத் தீண்டியதனாலே பூமணம் கமழும் நிறங்கொண்ட பிடரி மயிரையுடைய, கடிதாகச் செல்லும் குதிரைகள் பூட்டப்பெற்றிருக்கும் நெடிய தேரை விரையச்செலுத்தியபடி, இரவின் நடுயாமப் பொழுதிலே வருகின்ற அழகிய தேரினனான கொண்கனோடு, நீயும் சென்றுவிடுதற்கு யான் உடன்படா நின்றேன். அங்ஙனம் நீதானும் சென்றனையானால், ஆரவாரத்தையுடைய இவ்வூர்தான், யாது செய்யும்? பழிச்சொற்களைக் கூறுதலைச் சுமந்ததாய் இதுதான் ஒழிந்து போவதாக!

கருத்து : 'ஊர்ப் பழியினின்றும் பிழைத்ததற்குத் தலைவனுடனே உடன்போக்கிற் சென்று விடுதலே நன்று' என்பதாம்.

சொற்பொருள் : கடைக்கண் நோக்கம் – ஒருக்கணித்த பார்வை ; கரவான பார்வை. மறுகு – தெரு. வலந்தனள் – சுழற்றி அடித்தனள். பூநாறு – பூமணங் கமழும். குரூஉ – நிறங்கொண்ட. கடுமான் – விரையச் செல்லும் குதிரைகள். இயல் தேர் – அழகிய தேர்; இயலுகின்ற தேரும் ஆம்.

விளக்கம் : 'தலைவியது குடிமாண்பின் உயர்ச்சி பெரிது; அதனால் நேரடியாகப் பழிக்க அச்சமுற்ற அலவற் பெண்டிர்கள், கடைக்கண் சார்த்தியும், மூக்கு நுனியில் விரலைச் சேர்த்தியும், தமக்குள் கரவாகப் பேசியபடி அலர் உரைப்பார் ஆயினர்' எனலாம். அன்னை தன் மகளை ஐயுற்றனள் என்பதன்றேனும், பிறர் சுட்டிப் பழித்ததற்குக் காரணமாயின தன்மை குடிக்குப் பழியெனக் கொண்டு, மகளை அடித்தனள் எனக. 'அலருரையாற் காமஞ்சிறக்கும் எனினும் அன்னை அறிந்தாளாதலின், இனி இற்செறிப்பு நிகழ்தல் கூடும் என்பதாம். அதன் பின்னர்த் தலைவனோடு சேர்தல் வாயாதாகலின், அன்றிரவே போய்விடுதல் நன்றென்கின்றாள்.

இனிச் சிறைப்புறமாகச் சொல்லியதென்று கொள்ளின், இவற்றைத் தோழி படைத்து மொழித்தாளாகக் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/289&oldid=1693897" இலிருந்து மீள்விக்கப்பட்டது