பக்கம்:நற்றிணை 1.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

நற்றிணை தெளிவுரை


நகைநன்கு உடையன் பாண! நும் பெருமகன்
'மிளைவலி சிதையக் களிறுபல பரப்பி
அரண்பல கடந்த முரண்கொள் தானை.
வழுதி வாழிய பலஎனத் தொழுது ஈண்டு
மன் எயிலுடையோர் போல, அஃதுயாம் 5
என்னதும் பரியலோ இலம்எனத் தண்நடைக்
கலிமா கடைஇ வந்துஎம் சேரித்
தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ? அஞ்சக்
கண்ணுடைச் சிறுகோல் பற்றிக்
கதம்பெரிது உடையள்யாய் அழுங்கலோ இலளே. 10

பாணனே! நம் பெருமகனாவான் இதுகாலைப் பிறரால் நகையாடப்படுதலைப் பெரிதும் உடையானாயினான். "காவல் அரண்களது வலிமை சிதைந்துபோமாறு பல போர்க் களிறுகளை நாற்புறமும் பரப்பி வைத்துப், பகைவரது அரண்கள் பலவற்றையும் வென்று கைக்கொண்டவன், வலிமிகுந்த சேனைகளை உடையோனான பாண்டியன். 'இன்னும் பலகாலம் வாழ்வானாக' என்று தொழுது நின்று, அடையப் பெற்ற நிலையான அரண்களை உடையராயிருக்கும் சிலரைப் போல, அதன்பொருட்டு யாம் எவ்வளவேனும் வருந்துதல் இலராவோம்' என்று கூறித், தண்ணிய நடைகொண்ட கனைக்கும் குதிரையைச் செலுத்தியவனாக வந்து, எம் சேரியிடத்தே தன்னுடைய தாரினையும் தலைக் கண்ணியையும் எமக்குக் காட்டி, ஒருமைப் பாட்டைக் கொண்டதான என் நெஞ்சத்தையும் அப்போதே கவர்ந்து கொண்டான். அந்தத் தொடர்பானது என்றைக்கும் இனி என்னை விட்டுப் போகுமோ? ஆனால், யாவரும் அஞ்சுமாறு, கணுக்களையுடைய சிறு மூங்கிற்கோலைத் தன் கையிற் பற்றிக்கொண்டவளாக நிற்கும் அன்னையோ, பெரிதும் சினமுடையாளாய் உள்ளனள்; சிறிதேனும் என் நிலைக்கு வருத்தம் கொள்ளுதலும் இல்லாதாளாய் உள்ளனள்!

கருத்து : 'அவரோடு எனக்குள்ள உறவு வீட்டுப் போகாது எனினும், இதுகாலை அன்னையின் சினம் பெரிதாயிருக்கின்றது' என்பதாம்.

சொற்பொருள் : மிளை – காவலரண்; காவற்காடும் ஆம்; யானைகளாற் காவற் காட்டை அழித்துப் பின் அரணைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/291&oldid=1693901" இலிருந்து மீள்விக்கப்பட்டது