பக்கம்:நற்றிணை 1.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

நற்றிணை தெளிவுரை


வேட்டலைப் புலப்படுத்தக் கருதிய தோழி, அவனும் கேட்குமாறு, தலைவிக்குச் சொல்வாள்போல இப்படிக் கூறுகின்றனள்.]

நன்னுதல் பசப்பினும் பெருந்தோள் நெகிழினும்
கொன்முரண் இரும்புலி அரும்புழைத் தாக்கிச்
செம்மறுக் கொண்ட வெண்கோட் டியானை
கன்மிசை அருவியின் கழூஉஞ் சாரல்
வாரற்க தில்ல தோழி! கடுவன், 5
முறிஆர் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
கறிவளர் அடுக்கத்துக் களவினிற் புணர்ந்த
செம்முக மந்தி செய்குறி கருங்கால்
பொன்னிணர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்,
குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கிக் கவிழ்ந்துதன் 10
புன்றலைப் பாறுமயிர் திருத்தும்
குன்ற நாடன் இரவி னானே!

தோழி! மிளகுக் கொடிகள் வளர்ந்து படர்ந்திருக்கின்ற மலைச்சாரற்புறத்தே ஒரு கடுவனோடு களவுப்புணர்ச்சியிலே கூடி இன்புற்றது சிவந்தது முகத்தையுடைய மந்தி ஒன்று. புணர்ச்சியாலே தன்மேனியிடத்துத் தோன்றிய வேறுபாடுகளைத், தளிர்களைத் தின்றபடி இருக்கின்ற தன் பெரிய சுற்றமெல்லாம் அறிந்து கொள்ளுமோவென அஞ்சியது. அதனால், பொன்போன்ற பூங்கொத்துக்களையுடைய வேங்கையினது பூக்கள் மலிந்திருக்கும் ஒரு கிளையின்மீது ஏறிச்சென்று அமர்ந்ததாய், ஆழமான நீர்நிலையை உடையதான நெடிய சுனையை நோக்கிக் கவிழ்ந்து, தன்னுடைய புல்லிய தலையிடத்துக் கலைந்திருக்கும். மென்மயிரைத் திருத்திக்கொள்ளலையும் செய்தது. அத் தன்மையுடைய நாட்டினன் தலைவன். அவன்தான், நினது அழகான நெற்றியிடத்தே பசலை படர்ந்ததாயினும், நின்னது பெருந்த தோள்கள் வளை நெகிழப் பெற்றவானாலும், இரவுப் போதில் நின்பால் வாராதிருப்பானாக. எதிர்ப்பட்டாரைக் கொல்லுதலான மாறுபாட்டையுடைய பெரிய புலியினைப் புகுதற்கு அரிதான முழையருகே தாக்கிக் கொன்று, அதனாற் சிவந்த குருதிக் கீறையாகிய மறுவினைக்கொண்ட வெண்கோட்டு யானையானது, மலைமேனின்று வீழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/293&oldid=1693904" இலிருந்து மீள்விக்கப்பட்டது