பக்கம்:நற்றிணை 1.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

293


அருவியிடத்தே சென்று அக்கறையினைக் கழுவிக்கொள்ளும். அத்தகைய கொடிய காட்டு வழியைக் கடந்து, இரவில் இனி அவன் வாராதிருப்பானாக!

கருத்து : 'அவன், இனி நின்னை வரைத்துவந்தானாகி மணம்பெற்று வாழ்தலே செய்தற்கு உரியது' என்பதாம்.

சொற்பொருள் : முரண் – மாறுபாடு. கழூஉம் – கழுவும். கறி – மிளகுக் கொடி. முறி – தளிர், செய்குறை – செய்த புணர்குறி; இது தலைமயிர் கலைந்ததைக் குறித்ததாம். புன்தலை – புல்லிய தலை. பாறு மயிர் – கலைந்த மயிர்.

உள்ளுறை : 'மந்தியும் தலைமயிர்க் கலைவினைத் தன் கிளைகட்கு அஞ்சி ஒழுங்குபடுத்திக்கொள்ளும் நாடன்' என்றது, அவ்வாறே தலைவியும் தன் களவொழுக்கத்தாலே உண்டாகும் புதுப்பொலிவுகளை மறைத்து வாழ்கின்ற இக்கட்டான நிலையிலே உள்ளனள்: அது தீர்தற்கேனும் அவளை மணந்துகோடலே தக்கது என்பதாம்.

இறைச்சி : 'இரும்புலியைக் கொன்றழித்த களிறு அருவி நீரிலே தன் குருதிக்கறை படிந்த வெண் கொம்புகளைக் கழுவும்' என்றது, வழியது ஏதத்திற்குத் தாம் அஞ்சியதனைக் கூறினாலும், அவ்வாறே, தலைவிக்குக் களவாலே வந்துற்ற பழிதான் நீங்குதற்கு தானே காரணமாதலை அறிந்த தலைவன் அவளை விரைய மணந்து கொள்வானாக' என்பதுமாம்.

விளக்கம் : நுதல் பசத்தலும், தோள்வளை நெகிழ்தலும், களவின்கண் இடையீடுபட்டு வருகின்ற சிறுபிரிவையும் பொறுத்தற்காற்றாத தலைவினது தன்மையைச் சுட்டிக் கூறியனவாம். 'கொன் முரண் இரும்புலி' என அதன் ஆற்றலைக் கூறியது. அதனையும் குத்திக்கொன்ற களிற்றது ஆற்றலை வியந்து பாராட்டுதற்காம். 'அருவியிற் கழுவும்' என்றது, அவ்வழியே

வரும் தலைவனைக் காணின், அஃது அவனைத் தாக்குதலும் கூடும்' எனத் தாம் அஞ்சியது கூறியதாம். அதுவும் தான் கொண்ட கறையைக் கழுவுமாறுபோலத் தலைவனும் தன் பழியைப் போக்கவேண்டும் என்பதுமாம். 'பொன்னிணர் வேங்கைப் பூஞ்சினை' எனச் சொன்னது, அதுதான் மணத்திற்குரிய நற்காலமென அறிவுறுத்தற்காம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/294&oldid=1693905" இலிருந்து மீள்விக்கப்பட்டது