பக்கம்:நற்றிணை 1.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

299


155. பனி பரந்தன!

பாடியவர் : பராயனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) இரண்டாங் கூட்டத்துத் தலைவியை எதிர்ப்பட்டுத் தலைவன் சொல்லியது: (2) உணர்ப்புவயின் வாரா ஊடற் கண்ணே தலைவன் சொற்றதூஉம் ஆம்.

[(து–வி.) (1) இயற்கைப் புணர்ச்சி பெற்றதன் பிற்றை நாளிலே, குறியிடத்தில் தலைவியைச் சந்திக்கும் தலைவன், அவளைப் பேசவைக்கும் விருப்பினனாக இப்படிக் கூறுகின்றனன். (2) வெள்ளணி நாளிலே தலைவிபால் வந்துற்ற தலைவன், தான் இரந்து நின்று பலவாறு உணர்த்தியதன் பின்னரும் ஊடி நின்றாளை நோக்கி, "இவள்தான் யாவளோ?" என வேற்றாள்போலப் பாவித்துக் கூறுதலாக அமைந்தது]

'ஒள்ளிழை மகளிரொடு ஓரையும் ஆடாய்
வள்ளிதழ் நெய்தல் தொடலையும் புனையாய்
விரிபூங் கானல் ஒருசிறை நின்றோய்!.
யாரை யோநிற் றொழுதனெம் வினவுதும்
கண்டோர் தண்டா நலத்தை தெண்திரைப் 5
பெருங்கடற் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ;
இருங்கழி மருங்கு நிலைபெற் றனையோ?
சொல்லினி, மடந்தை!' என்றனென்; அதனெதிர்
முள்எயிற்று முறுவல் திறந்தன;
பல்லிதழ் உண்கணும் பரந்தவால் பனியே. 10

"ஒள்ளிழையரான நின் ஆயமகளிரோடுங் கூடிக்கலந்து பாவை புனைந்தாடும் ஓரையாடலையும் செய்யபாட்டாய். வளவிய இதழ்களையுடைய நெய்தற் பூக்களைத் தொடுத்து அமைத்த தொடலை மாலையினையும் புனையமாட்டாய். விரிந்த பூவையுடைய கானற்சோலையிடத்து ஒருபுறத்தே தனியாகச் சோர்ந்து நிற்பவளும் ஆயினை! நோக்கினாராலே நெருங்கமுடியாத நலத்தினை உடையவளே! மடந்தையே! நின்னைத் தொழுதேமாக நின்று வினவுகின்றேன். தெளிந்த அலைகளைக் கொண்ட பெருங்கடற் பரப்பினிடத்தே விரும்பி உறைகின்றவொரு நீரரமகளாமோ? கரிய கழியிடத்தே வந்து நிலைகொண்டு உறைகின்ற தேவமகளாமோ? நீதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/300&oldid=1694853" இலிருந்து மீள்விக்கப்பட்டது