பக்கம்:நற்றிணை 1.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318

நற்றிணை தெளிவுரை


விரைய வரைந்து வருபவனாவான். அதற்குள் வேற்று வரைவு குறித்த தூதும் நில்லாது மிகப் பலவாயின காண். அதனால், இனி நீயும் அன்னைக்கு அறத்தொடு நிற்பாயாக; நம்பால் வரும் இத் தூதையும் காலந்தாழ்த்தாது ஒழியச் செயவாயாக!

கருத்து : 'வேற்று வரைவு மிகுதலால், நின் காதலை அன்னைக்கு இப்போதே சென்று உரைப்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : அமர்க்கண் – அமர்த்தலையுடைய கண். ஆமான் – காட்டுப் பசு. முள்காது – புகுந்து தங்காது. கடவுள் – குன்றக் கடவுளாகிய குமரவேள். பேண்மார் – பேணும் பொருட்டாக; பேணுதல், வெறியயர்தல்.

விளக்கம் : 'குறிபிழைத்த கானவன், மழை பெய்தால் தெய்வவீறு தணியுமெனக் கொண்டு கடவுளைப் பேணித் தன் குறி வாய்க்கப் பெற்றானாய் மகிழும் நாடன் என்பது, குன்றவரது முருகபக்தியின் செறிவைக் காட்டுவதாகும். அவ்வாறே தான் வரைதற்குக் காலந் தாழ்த்தமையினாலே தனக்கு உரியாளான தலைவியை வேற்றார் வரைதற்கு முற்படுதலை அறியும் தலைவன், தன்னை அவளொடுங் கூட்டிய தெய்வத்தினை நினைந்து வழிபட்டு, அதனருளால் அவளை அடையப் பெறுவான் என்பதாம். 'நப் புணர்வு இல்லா நயனிலோர் நட்பு அன்ன ஆகுக என்னான்' என்றது, அவன் தான் உடலுறவாகிய காமத்தால் நின்னை விரும்பினான் அல்லன்; நின்பாற் கொண்ட உழுவலன்பினன் ஆவன் என்றதாம். அதனால், அவனைக் குறித்து அறத்தொடு நிற்றலும், அவனைத் தருமாறு தெய்வத்தை வேண்டலும் மேற்கொள்ளத் தக்கவென்பதும் ஆம்.

இறைச்சி : 'குறிபிழைத்தலால் தெய்வக் குறை உண்டென உணர்ந்து கடவுட் பேணுவர் கானவர்' என்றது. 'அவ்வாறே நாமும் தலைவனைக் கூட்டி வைக்குமாறு முருகயர்ந்து வேண்டுவோம்' என்றதாம்.

ஒப்பு : ஆமான் அமர்க்கண் உடைத்தென்பதனை 'அமர்க்கண் ஆமான்' எனவரும் (குறு.322) ஐயூர் முடவனாரது வாக்காலும் அறியலாம் 'அமர்க்கண் ஆமான் நெடுநிரை' எனப் புறநானூற்றுள்ளும் வரும் (புறம்.417:4.5.).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/319&oldid=1696094" இலிருந்து மீள்விக்கப்பட்டது