பக்கம்:நற்றிணை 1.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

325


அவ்வேளையிலே, அவன்பால் உண்டாகிய துன்பமோ பெரிது!

பரற்கற்கள் மிகுதியாகக் கிடக்கின்ற பாலைநிலத்திலே சிச்சிலிப் பறவையது தலையைப் போலத் தோன்றும் கள்ளிகள் வளர்ந்திருக்கும். அக் கள்ளிகளின் மேலாக மலர்களிலே நறுமணமுடையவான முல்லையது கொடிகள் பற்றிப் படர்ந்திருக்கும். ஆடுகின்ற தலையை உடையவான ஆட்டின் தொகுதிகளை மேய்க்கச் சென்று திரும்புவானான, வலிய கையினை உடையானுமான இடையன், இரவு மயங்கும் மாலைப்போதிலே அம் முல்லை மலர்களைக் கொய்வான். கொய்து, வெளிய பனங்குருத்தினது ஓலை நறுக்குடனே சேர்த்துத் தொடுத்து, அசைகின்ற அழகிய தழைமாலையாக அணிந்துகொண்டும் வருவான். அம் மாலையின் நறுமணம் அவன் வருங்காலத்தே சிறுகுடிப் பாக்கத்தின் கண்ணுள்ள தெருவனைத்தும் கமழா நிற்கும். அம் மாலைப்போதிலே, எம்முடைய பெரிதான மாளிகையினிடத்தேயுள்ள நெடுஞ்சுவரிலே இருக்கின்ற பல்லியானது, நம் வரவை அறிவித்து அவளுக்குச் சொல்லுமோ?

கருத்து : 'நாம் வருவதனை உணர்ந்தவளாய் அவள் துன்பந் தீர்ந்திருப்பாளோ?' என்பதாம்.

சொற்பொருள் : முன்னியது – செயக்கருதியது. பருவரல் – துன்பம். பல்லி படுதல் – பல்லி ஒலித்தல். சிரல் – சிச்சிலிப் பறவை. துரு – யாடு. தோடு – கூட்டம். தலைப் பெயர்த்தல் - மேய்த்தபின் வீட்டுக்குச் செல்லுமாறு மறித்து ஓட்டுதல். எல்லி – இரவு; இரவின் தோற்றமாகிய மாலை மயங்கும் பொழுது. வெண் போழ் – வெளியே பனை ஓலை நறுக்கு. தொடலை –தழையிட்டுக் கட்டிய மாலை. மறுகு – தெரு. நகர் – மாளிகை.

விளக்கம் : தலைவன் தான் வினைமேற செல்வானாகப் புறப்பட்ட ஞான்று, 'முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல் வருவல்' என்று கூறித் தலைவியைத் தெளிவித்துச் சென்றனன்; அதனைக் கேட்டலும் அவளது துன்பம் தீராது போயிற்று என்று கொள்ளுக 'காட்டிடத்துக் கள்ளி மேலாகப் படர்ந்து கிடந்த முல்லையிலே பூத்திருந்த பூக்களை மாலையாகக கட்டி இடையன் அணித்துவரத் தெருவெல்லாம் முல்லை மணம் பரவிற்று" என்றது, அவ்வாறே தான் தொலைவிடங்களுள் சென்று சேர்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/326&oldid=1696910" இலிருந்து மீள்விக்கப்பட்டது