பக்கம்:நற்றிணை 1.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

நற்றிணை தெளிவுரை


கொணரும் பொருள் மிகுதியால் தெருமுழுதும் தன்னைப் புகழும்: அதனைக் கேட்கும் தலைவியும் பெருமையடைவாள்' என்றதாம். 'பல்லி படுங்கொல்?' என்றது, அக் காலத்தும் பல்லி சொல்லப் பலன்காணும் வழக்கம் இருந்ததனைக் காட்டும்.

இறைச்சி : 'இடையன் தொடுத்தணிந்துவரும் தொடலையினது மணம் தெருவெல்லாம் கமழுமாறு போலத் தலைவியின் உள்ளமும் பல்லி நல்ல பக்கத்திலே சொல்லிய சொற்களைக் கேட்டதனால், தலைவனின் வரவை எதிர் நோக்கிப் பெரிதும் களிப்புக் கொண்டிருக்கும்' என்பதாம்.

மேற்கோள் : கற்பியலுள், 'அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும்' தலைவனுக்குக் கூற்று நிகழுமென்பதற்கு இச் செய்யுளைக் காட்டி, 'முன்னிய முடித்தனமாயின் என்னும் நற்றிணையுள் பொதுப்படச் சிறப்புக் கூறியவாறு காண்க' என்பர் நச்சினார்க்கினியர்.

170. எழுமின்! எழுமின் !!

பாடியவர் : .........
திணை : மருதம்.
துறை : தோழி விறலிக்கு வாயின் மறுத்தது.

[(து–வி.) தலைவனைப் பரத்தை யொருத்தியிடம் கூட்டிய விறலி, மீளவும் தலைவன் தலைவியை விரும்புதலினாலே, அவளிடம் தூதாகவும் செல்லுகின்றாள்; அவளுக்குத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

மடக்கண் தகரக் கூந்தல் பணைத்தோள்
வார்ந்த வால்எயிற்றுச் சேர்ந்துசெறி குறங்கின்
பிணையல் அம்தழை தைஇத் துணையிலள்
விழவுக்களம் பொலிய வந்துநின் றனளே
எழுமினோ எழுமின்எம் கொழுநற் காக்கம் 5
ஆரியர் துவன்றிய பேர்இசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது.
ஒருவேற்கு ஓடி யாங்குநம்
பன்மையது எவனோ இவள் வன்மைதலைப் படினே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/327&oldid=1731802" இலிருந்து மீள்விக்கப்பட்டது