பக்கம்:நற்றிணை 1.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

நற்றிணை தெளிவுரை


பாராட்டுகின்ற பழந்தமிழ்ப் பெண்மைப் பாங்கும் இதனானே அறியப்படும்.

மேற்கொள் : ஐவகையான உள்ளுறை உவமங்களைப் பற்றிக் கூறும் தொல்காப்பியப் பொருளியலுரைச் சூத்திரத்தின் உரையுள் (சூ. 238) இச் செய்யுளை உடனுறை உவமத்திற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரண அடிகள் காட்டுகின்றனர். 'இதனுள் புன்னைக்கு நாணுதும்' எனவே அவ்வழித் தான் வளர்த்த புன்னையென்றும், 'பல்காலும் அன்னை வருவள்' என்று உடனுறை கூறியும் விலக்கியவாறு எனவும் கூறுவர்.

களவியலுள், 'நாணுமிக வரினும் தோழிக்குக் கூற்று நிகழும்' என்பதற்கு இச்செய்யுளைக் காட்டி, 'இதனுள் அம்ம நாணுதும்' எனப் புதிய வந்ததோர் நாணுமிகுதி தோன்றி மறுத்து உரைத்தலின் தன்வயின் உரிமையும், அவன்வயிற் பரத்தமையும் கூறினாள் எனவுரைப்பர் நச்சினார்க்கினியர். உடனுறை உவமத்திற்கும் இச்செய்யுளைக் காட்டி, 'இதனுள் புன்னையை அன்னை நுவ்வையாகும் என்றதனால் இவளெதிர் நும்மை நகையாடுதல் அஞ்சும் நகையாடிப் பகற்குறி எதிரே கொள்ளாமைக் குறிப்பினான் மறைத்துக் கூறி மறுத்தவாறு காண்க' எனவும் உரைப்பர்.

இச் செய்யுளுள், 'நும்மினும் சிறந்தது நுவ்வையாகுமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே' என்பதனை எடுத்துக்காட்டிப், 'புன்னை மரத்தினை 'நுவ்வை' என்றல் மரபன்மையின் வழக்கினுள் மாற்றுதற்கு உரியதாம்' எனக் கூறுவர் பேராசிரியர்.

பிறபாடங்கள் : மணல் அழுவத்து,; பெய்தினிது வளர்ப்பு; புன்னையது நலனே.

173. யான் கேட்பேன்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி.
துறை : (1) தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ச் சிறைப்புறமாகச் சொல்லியது. (2) வெறி அச்சுறீஇத் தோழி அறத்தொடு நிலைபயப்பித்த தூஉம் ஆம்.

[(து–வி.) சிறைப்புறமாக வந்து நிற்கும் தலைவன் கேட்டுத் தலைவியை வரைந்து கோடற்கு முற்படுமாறு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/333&oldid=1731808" இலிருந்து மீள்விக்கப்பட்டது