336
நற்றிணை தெளிவுரை
மறையுமோ? அதுதான் என்ன பயனை உடைத்தோ? நீயே கூறுக.
கருத்து : 'பிரிந்தவன் மீண்டு வந்தும் என்னைக் கருதானாய்த் தன் காதற்பரத்தையைத் தழுவுவதிலேயே விருப்புற்றுத் திரிகின்றனன்' என்பதாம்.
சொற்பொருள் : கற்றை - அடுக்கடுக்கான செறிவு. தாளம் போந்தை – தாளிப்பனை. கோள் – காய்க் குலைகள். சினை – மடல். உறையினும் – தங்கியிருப்பினும். உயங்கினை – வாட்டமுற்று வருந்தினை. அற்றும் – அத்தன்மைத்தும், வீழாக் கொள்கை – விருப்பமுறாத கோட்பாடு. புல்லு – அணைப்பு.
விளக்கம் : ஈந்தைப்போன்று கற்றைக் குலைகளை உடைத்தாயினும், தாளிப்பனை ஈந்தினுங் காட்டில் தாழ்ச்சியுடையது ஆகும்; இவ்வாறே தலைவியைப் போலப் பரத்தையும் ஒரு பெண்ணாயினும், பண்பாற் குறைந்தவள் என்று கூறுகின்றாள். 'ஆண்' என்றது களிற்றினை. 'பறவை' எனக் கொள்ளின் 'புலியெதிர் வழங்கும்' என்னும் செய்தியாற் பொருள் சிறப்பதில்லை. மல்லல் – வளம்; மல்லல் மார்பு – நறுஞ்சாந்தின் வளமை திகழும் பரந்தமார்பு. அச்சாந்து பரத்தையைத் தழுவியதனாற் கலைந்திருத்தலைச் கண்டு தலைவி ஊடி நலிந்தாள் என்று கொள்க.
இறைச்சி : (1) ஈந்தின் கற்றையான நெற்றுக் குலை போன்றது தாளிப் பனையின் நெற்றுக் குலையும் என்றது, பரத்தையும் தன்னைப் போன்ற பெண்மகள் தானேயன்றி வேறு சிறப்புடையாள் ஆவளோ என்றதாம். வீழாக் கொள்கையாட்டியான அவளினும் அன்புற்ற தான் சிறந்தவள் என்பதும் ஆம். அதனை மறந்தான் அவன் என்பதும் கூறினாள்.
(2) களிறு பிடியை அழைக்கப் புலியானது எதிர்க் குரலெடுத்து வந்தாற் போன்று,தான் தலைவனின் வரவை ஆர்வத்துடன் எதிர் நோக்கியிருக்க, அவன் வந்ததும், அவனுக்கு நன்மை கருதாதாளான பரத்தை முழக்கோடு எதிர்வந்து அவனைத் தன் கையகப்படுத்தினள் என்பதுமாம்.