பக்கம்:நற்றிணை 1.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

337


175. அடுபாலும்! சுடுவானும்!!

பாடியவர் : ......
திணை : நெய்தல்.
துறை : தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

[(து–வி.) சிறைப்புறமாக நிற்கும் தலைமகன் கேட்டுத் தலைவியை வரைந்து மணந்து கொண்டாலன்றி இனி உறவுவாயாதென்று உணருமாறு, தோழி தலைவிக்குச் சொல்லுவாள் போலச் சொல்லுகின்றது இச் செய்யுள்.]

நெடுங்கடல் அலைத்த கொடுந்திமிற் பரதவர்
கொழுமீன் கொள்ளை அழிமணல் குவைஇ
மீன்நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறுதீ விளக்கில் துஞ்சும் நறுமலர்ப்
புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை 5
தான்அறிந் தன்றோ இலளே; பானாள்
சேரிஅம் பெண்டிர் சிறுசொல் நம்பிச்
சுடுவான் போல நோக்கும்,
அடுபால் அன்னவென் பசலை மெய்யே.

வளைவான படகுகளிலே ஏறிக்கொண்டு, நெடுங்கடலிடத்தே வேட்டம் மேற்கொண்டு சென்றாரான பரதவர்கள், கடலினை வருத்திப் பிடித்துக்கொணர்ந்த கொழுமையான மீன்களைக், கடற்கரையிடத்தே கிடக்கும் நெகிழ்ச்சியான மணற்பரப்பிலே கொணர்ந்து குவித்துவைப்பார்கள். மீன் நெய்யைக் கிளிஞ்சிலிலே வார்த்துச் சிறுசுடர் விளக்கினையும் ஏற்றுவார்கள். காற்று அதனை அணைத்து விடாதிருக்கக் கிளிஞ்சில்களைக் கொண்டு நாற்புறமும் அவ்விளக்கினைப் பொத்தியும் வைப்பார்கள். அதன்பின், அச் சிறுதீ விளக்கின் ஒளியருகேயே படுத்துக் கொண்டாராக உறங்குதலையும் மேற்கொள்வார்கள். அவ்விடத்தே, நறிய மலர்களையுடைய புன்னை மரமும் உயரமாக வளர்ந்திருக்கும். அத்தகைய துறைக்கு உரியவன் நம் தலைவன். அவனோடு நாம் கொண்டுள்ள இக் களவுறவினை நம் அன்னை தானே அறித்துவைத்தாளும் அல்லள். ஆனால், இரவின் நடுயாமத்தே சேரியின்கண்ணுள்ள அலவற் பெண்டிர்கள் சுட்டிச் சுட்டிக் குறிப்பாகப் பேசிக்கொண்ட சிறுமையான சொற்களைக் கேட்டு, அவற்றை உண்மை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/338&oldid=1731812" இலிருந்து மீள்விக்கப்பட்டது