பக்கம்:நற்றிணை 1.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

355


அழித்தலைப் போலத் தலைவியைப் பிரிவு என்னும் கொடுமைக்கு உட்படுத்தி நீயும் உயிரழியச் செய்வாய் என்கின்றாள். 'வறுநீர் நெய்தல் போல' என்றது, களவுக் காலத்தே இடையீடுபட்டு வருகின்ற பிரிவினாலே நலிவுற்று, வரைந்து மணந்து கொள்வான் என்ற நம்பிக்கையால் மட்டுமே உயிர்வாழ்ந்திருப்பவள் தலைவி; அவளை நீதான் முற்றவும் அழியச் செய்கின்றனை என்றதாம்; அவள் இல்லத்தார் தரவு அவளுக்கு நலனைத் தருவதில்லை என்பதுமாம்.

184. வேகும் உள்ளம்!

பாடியவர்: ......
திணை : பாலை.
துறை : மனைமருட்சி.

[(து–வி.) தலைமகள் தலைமகனுடன் உடன்போக்கிற் சென்றுவிடுகின்றாள்; மகளது பிரிவைப் பொறுக்கமாட்டாத தாய், மனையிலிருந்து மயங்கிப் புலம்புவதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

ஒருமகள் உடையேன் மன்னே! அவளும்
செருமிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்!
'இனியே தாங்குநின் அவலம்' என்றிர்; அதுமற்று
யாங்கனம் ஒல்லுமோ? அறிவுடையீரே! 5
உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணிவாழ் பாவை நடைகற் றன்னவென்
அணியியற் குறுமகள் ஆடிய
மணியேர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

அறிவு உடையவரான பெண்டிர்களே! யானோ பல பெண்களைப் பெற்றவளும் அல்வேன்; ஒரே ஒரு மகளை மட்டுமே உடையவளாக இருந்தேன்; அவளும் இதுகாலைப் போர்க்களத்தே மிக்குச்சென்று போரியற்றும் வலிவுடையானாகிய கூர்மையான வேலினைக் கைக்கொண்டு வந்த காளை ஒருவனோடு, நேற்றிரவுப் போதிலே பெருமலையிடத்தாகிய கடத்தற்கரிய சுரநெறி வழியே சென்றனள். அவளை யிழந்து வருந்தும் என்னிடத்தே, 'அவள் சென்றது அறத்தோடு பட்டது; ஆதலின் நீதான் இனி நின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/356&oldid=1706389" இலிருந்து மீள்விக்கப்பட்டது