பக்கம்:நற்றிணை 1.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376

நற்றிணை தெளிவுரை


பணைத்தோள் எல்வளை ஞெகிழ்த்தவெம் காதலர்
அருஞ்செயல் பொருட்பிணிப் பிரிந்தன ராக
யாருமில் ஒருசிறை இருந்து
பேரஞர் உறுவியை வருத்தா தீமே!

ஈங்கையின் மொட்டுக்கள் உருக்கிய அரக்கைப்போன்ற நிறத்தையும், வட்ட வடிவையும் கொண்டன. அவற்றோடு விளங்கும் பஞ்சுபோன்ற தலைப்புறத்தையுடைய புதுப்பூக்களினின்றும் தேன்துளிகள் வீழ்ந்து நின்பால் கலக்கவும், புதுமழை பெற்றமையாலே நீர் நிறைந்து ததும்பியபடியிருக்கும் புலங்களுள்ளே புகுந்து, அவ்வீரத்தை அளைந்தும், அத்துடனும் அமையாயாய், எம்முடைய பெரிதான ஊரினது புறத்தேயும் எங்கணும் வந்து தழுவிக்கொள்ளும் பெருங்குளிர்ச்சியையுடைய வாடைக் காற்றே! நினக்கு யாம் ஒருபொழுதேனும் தீதுசெய்வதற்கு நினைத்தேமும் அல்லமே! பணைத்த எம் தோள்களிடத்தே செறிவாக விளங்கிய ஒள்ளிய வளைகளை நெகிழச் செய்தவர் எம் காதலர்; அவர் செயற்கருஞ் செயலான பொருளீட்டிவரும் செயலிடத்தே தம் உள்ளம் பிணிப்புக்கொள்ள எம்மைப் பிரிந்தும் போயினர். அதனாலே, எவரும் துணையற்றேமாய், எவரும் வழங்குதல் அற்ற ஒருபக்கத்தே தனித்திருந்து பெருந்துன்பத்தை யாமும் அடைந்துள்ளேம். அத்தகைய எம்மை நீயும் வருத்தாதே கொள்வாயாக!

கருத்து : 'நின்னால் யாம் வருத்தமுறலையேனும் அறிந்து அவர்தாம் எனக்குத் துணையாமாறு வந்திலரே' என்பதாம்.

சொற்பொருள் : வட்டு – வட்டம்; உருளும் ஆம். புளிற்றுப் புலம் – நாளேரிட்டு உழுதுள்ள கழனி; புது நீர் தேங்கி நிற்கின்ற வயற்புறமும் ஆம். இரும்புறம் – ஊரது பெரிதான பக்கம்; தலைவியது கருமயிர் தாழ்ந்து தொங்கியபடியிருக்கும் பின்பக்கமும் ஆம். பணைத்தோள் – மூங்கிலனைய தோள்கள்; பணைத்த தோள்களும் ஆம்; பணைத்தல் – பெருத்தல். எல் – ஒளி.

விளக்கம் : 'சங்கை மலர்களினின்றும் வழிந்த தேனொடு கலந்தும், புதுவெள்ளம் நிரம்பிக் கிடக்கும் வயற்புறங்களிலே அளைந்தாடியும், பெருங் குளிர்ச்சியுடையையாய் வந்து, பிரிவுத்துயராலே வெம்மையுற்றிருக்கும் என் இரும்புறத்தைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/377&oldid=1706935" இலிருந்து மீள்விக்கப்பட்டது