பக்கம்:நற்றிணை 1.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378

நற்றிணை தெளிவுரை


தனிநிலை இதணம் புலம்பப் போகி
மந்தியும் அறியா மரம்பயில் ஒருசிறை
குன்றக வெற்பனொடு நாம்விளை யாட
இரும்புகவர் கொண்ட ஏனற்
பெருங்குரல் கொள்ளாச் சிறுபசுங் கிளிக்கே? 10

தோழி, வாழ்வாயாக! யான் சொல்லப்போகும் இதனையும் கேட்டறிவாயாக. பெரிய வாயினை உடையதும் தன் பக்கத்தே கன்றினைக் கொண்டிருப்பதுமான பிடியோடும் சேர்ந்து சென்ற, வலிமிகுந்த கொம்புகளையும், நிலத்தின்கண் தொடுதலையுடைய நெடிய கையினையும் உடைய பெருமைமிக்க களிற்றினுக்கு யாம் யாது கைம்மாறு செய்வேமோ? அன்றியும், மலைமேலே அமைக்கப்பெற்ற தனித்த நிலை கொண்ட கட்டுப்பரணானது தனிமையுற்று வறிதாகும்படி அகன்றுபோய் மந்திகளும் புகுந்தறியாத செறிந்த மரங்கள் விளங்கும் ஒரு பக்கத்தே சென்று குன்றுகளையுடைய வெற்பனோடுங் கூடினேமாய் நாம் விளையாட்டயரக், கரிய கவர்த்தலைக் கொண்ட தினையது பெரிதான கதிரைக் கவர்ந்து கொண்டுபோகாத சிறிய பசிய கிளிக்கும் யாது கைம்மாறு செய்வேமோ?

கருத்து : 'யானைக்குள்ள பாசமும், கிளிக்குள்ள அருளும் அவனிடமில்லையே?' என வருந்தியதாம்.

சொற்பொருள் : கைம்மாறு – பெற்ற உதவிக்குப் பிரதியாக உதவி செய்தல். கயவாய் – பெரியவாய். வலன் – வெற்றி. நிலன் ஈர் தடக்கை – நிலத்தை அறுத்தபடி செல்லும் தடக்கை. அண்ணல் – தலைமையுடைய நிலை. கல் – மலை. இதணம் – பரண். இரும்பு – கருமை, இரும்பைப் போன்ற எனினும் ஆம்.


விளக்கம் : 'புனங் காவலை மறந்தும் அவனுக்கு உதவினேமாகிய எம்மை, மறந்து கைவிட்ட கொடியனாயினான்' அவன் என்பதாம்; கைவிட்டது களவிடைப் பிரிவினாலே துயரப்படுமாறு பிரிந்து சென்றது; காவலொழிந்தமை அறிந்தும் தினைகவராத கிளியின் பண்பைப்போல், அவரும் எம் களவு வெளிப்பட்டு அலராகாவண்ணம் எமக்கு உதவினர் அல்லரே என்பதாம். 'மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை' என்றது, பிறர் அறிந்து அலருரைத்தற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/379&oldid=1706939" இலிருந்து மீள்விக்கப்பட்டது