பக்கம்:நற்றிணை 1.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

379


ஏதுவில்லை எனினும், அவளுடலில் தோன்றிய மாற்றங்களே அதனைப் பிறருக்கு அறிவித்து அலரெழச் செய்வதாகும் என்பதற்காம்.

கிளிகள் அன்று கதிர்களை அழித்திருந்தனவேல் பயிரழிவு கண்ட தந்தை ஐயுற்றுக் களவை அறிதலும், அதனைத் தடுத்தற்கு முயல்தலும் நேர்ந்திருக்கும் என்பாள் 'பெருங்குரல் கொள்ளாச் சிறு பசுங்கிளி' என்றனள். ஆனால், அவைதாம் இதுகாலை அழிவுசெய்யும் என்கின்றனளும் ஆம்.

இறைச்சி : 'கன்றை மருங்கிலுடைய பிடியைக் களிறு புணர்ந்து இயலும்' என்றது, தலைவியை மணந்து இல்லறம் மேற்கொண்டு, புதல்வனைப் பயந்து, புதல்வன் மருங்காகத் தலைவன் தன்னை இடையறவுபடாது முயங்கி இயங்குவானாக என்றதாம்.

'யானைக்குக் கைம்மாறு யாது செய்வாங்கொல்?' என்றது, முன்னர்த் தலைவனுடன் தலைவி பெற்ற முதற்கூட்டமாகிய களிறுதரு புணர்ச்சியை நினைந்து கூறியதாகும்; அதனைத் தலைவனுக்கு நினைவுபடுத்தியது மாகும்.

195. அருளாதது கொடிதாகும்!

பாடியவர் : ........
திணை : நெய்தல்.
துறை : களவின் கண் நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாயின தோழி வரைவு கடாயது.

[(து–வி.) தலைவன் தலைவியைக் களவாகப் பெற்றுத் துய்ப்பதிலேயே கருத்தினனாயிருக்கின்றான். களவு நீட்டித்தலை அறிந்த தோழிக்குக் கவலை மிகுதியாகின்றது. அவன் உள்ளத்தைத் தலைவியை வரைந்து மணந்து வாழ்தலில் செலுத்துதற்கு நினைப்பாளாக இவ்வாறு கூறுகின்றனள்.]

அருளா யாகலோ கொடிதே!—இருங்கழிக்
குருளை நீர்நாய் கொழுமீன் மாந்தித்
தில்லையம் பொதும்பிற் பள்ளி கொள்ளும்
மெல்லம் புலம்ப! யான்கண் டிசினே
கல்லென் புள்ளின் கானலம் தொண்டி, 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/380&oldid=1708241" இலிருந்து மீள்விக்கப்பட்டது