பக்கம்:நற்றிணை 1.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380

நற்றிணை தெளிவுரை


நெல்லரி தொழுவர் கூர்வாள் உற்றெனப்
பல்லிதழ் தயங்கிய கூம்பா நெய்தல்
நீரலைத் தோற்றம் போல
ஈரிய கலுழும்நீ நயந்தோள் கண்ணே.

கரிய கழியிடத்தே வாழும் நீர்நாயின் இளங் குட்டியானது, அவ்விடத்தேயுள்ள கொழுமையான மீன்களைப் பற்றித் தின்றுவிட்டுக் கழிக்கரையிடத்தேயுள்ள தில்லை மரப் பொந்திலே சென்று படுத்து உறக்கங்கொள்ளுகின்ற, மென்மையான கடற்கரை நாட்டின் தலைவனே! கல்லென ஒலிக்கும் குருகினங்களைக் கொண்ட அழகிய கானற் சோலையினையுடைய தொண்டிப்பட்டினத்தே, நெற்கதிரை அரிகின்ற உழவரின் கூரிய அரிவாளினாலே அறுக்கப்பட்ட பலவிதழ்களோடும் கூடிய குவியாத நெய்தல் மலர்கள் நீரிடத்தே அலைப்புண்டு வருந்தும் தோற்றத்தைப்போல, நீ விரும்பும் தலைவியின் கண்களும் ஈரியவாய்க் கலங்கி அழா நிற்கும். அதனைக் கண்டிருந்தும் அவளுக்கு அருளிச் செய்யாயாக வாளாவிருத்தல் மிகமிகக் கொடிதானதுகாண்!

கருத்து : 'அவளை வரைந்து நின்னுடன் நின்னூர்க்குக் கொண்டு சென்றாலன்றி அவளது மனத்துயரம் தீராது' என்பதாம்.

சொற்பொருள் : குருளை நீர் நாய் – நீர் நாயின் இளங்குட்டி. தில்லை – ஒருவகை மரம்; கழிக்கரை யோரங்களிலே பொந்துகளோடு கூடிய இம் மரங்கள் காணப்படும். பொதும்பு – பொந்து. புள் – கடற்புள். தொண்டி – தொண்டிப் பட்டினம்; இது சேரர்க்கு உரியது. தொழுவர் – பணியாளர். கூம்பா நெய்தல் – குவியாத நெய்தல். நயந்தோள் – விரும்பியோளான தலைவி.

விளக்கம் : நெல் வயல்களிலே கிளைத்துப் படர்ந்திருந்த நெய்தற்கொடிகளிலே பூத்துக்குலுங்கிய மலர்கள், நெல்லரிவார் அக்கொடிகளையும் அரிந்துவிடத், தாம் அக்கழனி நீரிடத்தே அலைப்புண்டு வருந்துமாறு போலத், தலைவியின் கண்கள் தலைவனின் வரவை எதிர்பார்த்துப் பார்த்துக் காணாவாய்ச் சிவப்புற்றுக் கலங்கி அழும் என்பதாம். நெற்பயன் கொள்ளலே உழவரின் செயலாகவும், அதனிடைப்பட்ட நெய்தல் மலர்கள் துன்புற்றனபோலத், தலைவியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/381&oldid=1706941" இலிருந்து மீள்விக்கப்பட்டது