பக்கம்:நற்றிணை 1.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

381


கூடியின்புறலே தலைவனின் கருத்தாகத் தலைவியின் நிலையும் தன் இல்லத்து நின்றும் அறுப்புண்ட நெய்தலைப்போலாகி, அவள் கண்களும் கலங்கியழுவனவாயின என்று கொள்க.

உள்ளுறை : நீர்நாயின் குருளையானது தன்னலம் ஒன்றே பெரிதாக நினைந்ததாய்க் கழியிடத்துக் கொழுவிய மீன்களைப்பற்றி நிறையத்தின்று தன் பசியாறிய பின்னர்க் கரையருகேயுள்ள தில்லைமரப் பொந்திற்சென்று படுத்து உறக்கங்கொள்ளும் என்றனள். அவ்வாறே தலைவனும் தலைவியைத் துய்த்து இன்புற்றபின்னர், அவளை மறந்தானாய்த் தன்னூரின் கண்ணுள்ள தன் இல்லிடத்துச் சென்று உறங்குவன் என்பது இதுவாகும். ஆயின், தலைவியோ கண்ணுறக்கம் சற்றேனும் இல்லாதாளாய் வருந்தி நலனழிவள் என்பதாம்.

தொண்டிப் பட்டினம் சேரர்க்கு உரியது என்பதனைத் 'திண்தேர்ப் பொறையன் தொண்டி' (குறு. 128: 2) எனப் பரணர் கூறுமாற்றால் அறியலாம். நற்றிணை எட்டாம் செய்யுளும், 'கண்போல் செய்தல் போர்வில் பூக்கும் திண்தேர்ப் பொறையன் தொண்டி' என்று குறிப்பிடும். பதினெட்டாம் செய்யுளுள் 'கானலம் தொண்டிப் பொருநன், வென்வேல் தெறலருந் தானைப் பொறையன்' எனவும் வரும்.

196. மதியமே தேய்க!

பாடியவர் : வெள்ளைக்குடி நாகனார்.
திணை : நெய்தல்.
துறை : நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகள், திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது.

[(து–வி.) தலைவனோ நெடுந்தொலைவிடத்தே உள்ள நாட்டிற்குப் பொருள் தேடி வருதலின் பொருட்டாகப் பிரிந்து சென்றிருந்தனன். அவனது பிரிவினைப் பொறுக்க மாட்டாதாளாகத் தலைமகள் பெரிதும் வருந்தி வாடியிருந்தனள். திங்களின் வரவால் அவ்வருத்தம் மேலும் மிகுதியாகின்றது. அப்போது அவள் தன்னுள்ளே சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/382&oldid=1708242" இலிருந்து மீள்விக்கப்பட்டது