பக்கம்:நற்றிணை 1.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

400

நற்றிணை தெளிவுரை


என்பானையும் பாடியுள்ளனர். இவரூர் 'காண்டவாயில்' என்பதாம்; இதனை நற்றிணை 38 ஆம் செய்யுளால் உய்த்துணரலாம். நெய்தனில மக்களது வாழ்வையும் பழக்கவழக்கங்களையும் நன்கறிந்து நயமாகப் பாடியுள்ளவர் இவரென்றும் அறியலாம். இவர் செய்துள்ள புறநானூற்றுச் செய்யுள் (274) பண்டைத் தமிழ்மறவரது மறமாண்பினை உயர்த்துக் காட்டுவதாகும். அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகியவற்றுள் இவராற் பாடப்பெற்ற செய்யுட்களைக் காணலாம். (மொத்தம் 35 செய்யுட்கள்). 'அவர் செய்குறி பிழைப்பப், பெய்யாது வைகிய கோதைபோல மெய்சாயினை–(நற். 11); 'அறிவும் உள்ளமும் அவர்வயிற் சென்றென, வறிதால் இகுளையென் யாக்கை; இனியவர் வரினும் நோய் மருந்து இல்லர்–(நற்.) 94; 'ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் உள்ளலாகா உயவு நெஞ்சமொடு ஊடலும் உடையமோ?'–(நற். 131); 'சிலரும் பலரும் கட்கண் நோக்கி, மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி, மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்ற' – (நற்.149) எனச் சுவைபடத் தாம் கூறும் செய்திகளைக் காட்சிப்படுத்தி, உளத்தே நிலைப்படுமாறு எடுத்துரைக்கும் சொல்லாட்சித் திறனில் இவர் மிக்கவராவார்.

எயினந்தையார் 43

எயின் + தந்தை = எயினந்தை; எயினன் என்பானைத் தந்தையாகக் கொண்டவர் என்பது பொருள். இவருடைய பெயருக்கு இதுவே காரணமாகலாம். 'உடைமதில் ஓரெயின் மன்னன் போல' என இச் செய்யுளுள் அழிவுமிகுதிக்கு உவமை காட்டிய திறத்தால் இப் பெயரைப் பெற்றனரெனலும் பொருத்தமுடையதாகும். முற்கூறப்பெற்ற இளங்கீரனார் இவருடைய மகனார் என்று கொள்ளல் வேண்டும். பிரிதலை யெண்ணி முயலும் தலைவனிடம், பிரிவினால் தலைவிக்கு வந்துறும் துயரமிகுதியை எடுத்துக்கூறும் தோழி கூற்றாக அமைந்த இச் செய்யுள் மிகவும் சுவையுடையதாகும்.

ஒருசிறைப் பெரியனார் 121

நாஞ்சில் வள்ளுவனைப் பாடியவர்—(புறம் 137) இவர். இவர் செய்தவாகக் காணப்பெறுவன குறுந்தொகையின் 272 ஆவது செய்யுளும், இச் செய்யுளும், புறநானூற்று 137ஆவது செய்யுளும் ஆகும். சினத்தாற் சிவப்புற்ற கண்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/401&oldid=1711058" இலிருந்து மீள்விக்கப்பட்டது