பக்கம்:நற்றிணை 1.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடிய சான்றோர்கள்

401


களுக்கும் குருதியொடு பறித்த செங்கோல் வாளியை உவரித்து நம்மை வியப்பிலாழ்த்துகின்றார் இவர் (குறு.272). தலைமகனைத் தேர்ப்பாகன் தேற்றுவதாக அமைந்த முல்லைத் திணைச் செய்யுள் இதுவாகும்.

ஓரம்போகியார் 20

இந் நூலுள் இச் செய்யுளும், 360 ஆவது செய்யுளும் இவர் பெயராற் காணப்படுவன. மருதத்திணைச் செய்யுட்களியற்றுவதில் இவர் வல்லவர். ஐங்குறு நூற்றுள் மருதம் பற்றிய நூறுசெய்யுட்களைப் பாடியவர் இவர். ஆதன் அவினி, பாண்டியன், சோழன், மத்தி இருப்பையூர் விரான் என்போரைப் பாடியவரும் இவராவர். தலைவனோடு நெடுக ஊடுதல் வேண்டாவெனத் தோழி கூற்றாக இவர் உரைத்துள்ள அகநானூற்றுச் செய்யுள் வியக்கத்தக்கதாகும் (அகம் 316). ஐங்குறு நூற்றுச் செய்யுட்கள் அனைத்தினும் மருதத்து வளமையையும் மருதநிலத் தலைவன் தலைவியரது மனப்போக்குக்களையும் இவர் மிகவும் செறிவோடு காட்டுகின்றனர். 'கரும்புநடு பாத்தியிற் கலித்த வாம்பல் சுரும்பு பசி களையும் பெரும்புனல் ஊர!; 'நறுவடு மாஅத்து விளைந்துகு தீம்பழம் நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉங் கைவண் மத்தி கழாஅர்' என உவமை நயப்பாட்டுடன் உரைக்கும் ஆற்றலுடையவர் இவர். இச் செய்யுளுள் தலைவனின் பரத்தையைத் தான் கண்டதாகத் தலைவி கூறுகின்ற தன்மையிலே, அவளைச் சொல்லோவியப்படுத்து இவர் காட்டுகின்றனர்.

ஔவையார் 129, 187

பாணர் மரபினரும் பைந்தமிழ் வல்லாருமான இப்பெருமாட்டியாரது வரலாறு மிகப்பரந்தது ஆகும். இவர்பாற் பேரன்பு கொண்டோனாக விளங்கியவன் தகடூர்க் கோமானான அதியமான் நெடுமான் அஞ்சியாவான். சங்கத்தொகை நூற்களுள் 59 செய்யுட்கள் இவராற் செய்யப் பெற்றனவாகக் காணப்படும். இச் செய்யுட்களுள் முன்னது குறிஞ்சித் திணையையும்; பின்னது நெய்தற்றிணையையும் பற்றியவாம். 'காதலர் ஒருநாட் கழியினும் உயிர் வேறு படூஉம்' தலைவியது காதற்பெருநிலையையும், தலைவனைப் பிரிந்து இரவைக் கழிக்க மாட்டாளாய்க் கவலும் தலைவியது உளப்பாங்கையும் இச் செய்யுட்களுட் கண்டு இன்புறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/402&oldid=1711059" இலிருந்து மீள்விக்கப்பட்டது