பக்கம்:நற்றிணை 1.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடிய சான்றோர்கள்

409


போல அமைந்த இப்பாலைத்திணைச் செய்யுள் மிக்க நயச் செறிவினை உடையதாகும். இவரை வாணிகச் சாத்துக்களின் தவைவர் எனவும் கருதலாம்.

சிறுமோலிகனார் 61

'மௌலி' என்பது அரசர்க்குரிய திருமுடியாகும். அதனைச் சமைக்கும் நுட்பவினைத் திறனுடையோராதன் பற்றி இவரை மோலிகனார் என்றார் போலும்! 'சிறுமை' பருவத்து இளமையைக் குறித்ததாகலாம். இரவுத்துயிலும் ஒழிந்தாராகத் தலைவனின் வரவைநோக்கிக் காத்திருந்த தம் நிலையைத் தோழி தலைவனுக்கு உணர்த்தும் பாங்கிலே அமைந்துள்ள இச் செய்யுள் இனிமை யுடையதாகும். 'கான்கெழு நாடற் படர்ந்தோர்க்குக் கண்ணும் படுமோ?' என்று வருவதன் செறிவை அறிந்து, நினைந்து இன்புறுக.

சிறைக்குடி ஆந்தையார் 16

'சிறைக்குடி' என்னும் ஊரினர்; ஆதனின் தந்தையாதலின் ஆந்தை எனப் பெற்றனர். இச்செய்யுளோடு குறுந்தொகையுள் 56, 57, 62, 132, 168, 222, 273, 300 ஆகிய செய்யுட்களையும் செய்தருளியவர் இவராவர். 'புணரிற் புணராது பொருளே; பொருள்வயிற் பிரியிற் புணராது புணர்வே' எனப் பொருளினாலாகும் வாழ்வையும் பொருளாசையால் வாழ்வில் இன்பம் இடையீடுபடுதலையும் விளக்கியிருப்பவர் இவராவர். இவருடைய குறுந்தொகைச் செய்யுட்கள் அனைத்தும் அகத்திணை ஒழுக்கத்துப் பொருள் பொதிந்த பலநுட்பமான உளக்கூறுபாடுகளை விளக்குவனவாகும். 'நல்லோளது நறியமேனி முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிது' (குறு.62) எனவும்; 'பணைத்தோள் மணத்தலும், தணத்தலும் இலமே, பிரியின் வாழ்தல் அதனினும் இலமே' (குறு. 168) எனவும் வரும் தொடர்கள், இவரது நுட்பமான புலமைத்திறத்தைக் காட்டுவனவாகும்.

சீத்தலைச் சாத்தனார் 36

சாத்தனார் எனும் பெயருடையாரான இவர் 'சீத்தலை' என்னும் ஊரினராகக் கருதப்படுபவராவர்; சீத்தலை திருச்சி மாவட்டத்துள்ளதோர் ஊரென்பர் 'செர்த்தலை' என இந்நாளில் வழங்கும் சேரநாட்டு ஊரினரும் ஆகலாம். இவர் மதுரையிற் கூலவாணிகம் புரிந்தமைபற்றிக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனவும் உரைக்கப்படுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/410&oldid=1711068" இலிருந்து மீள்விக்கப்பட்டது