பக்கம்:நற்றிணை 1.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412

நற்றிணை தெளிவுரை


தூங்கலோரியார் 60

இச்செய்யுளும், குறுந்தொகை 151, 295 ஆம் செய்யுட்களும் இவராற் செய்யப்பெற்றவாகக் சாணப் பெறுவன. இவர் ஊணூர்த் தலைவனான தழும்பனைப் பாடியவர் எனக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரின் அகப்பாட்டால் (அகம் 226) அறிகின்றோமாயினும், அப்பாட்டுக் கிடைத்திலது. 'ஒரு பெண் மனைவியாக வீட்டுள் வந்த நிமித்தத்தால் அவ் வீட்டு வளம் பெருகுதலுண்டு' என்பதனை இவரது செய்யுளால் அறிகின்றோம் (குறு.295). 'மறப்பரும் காதலியொழிய, சிறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே'; 'பெருநலக் குறுமகள் வந்தென இனி விழவாயிற்று என்னும் இவ்வூரே' எனவரும் சிறந்த சொல்லோவியங்களை அமைத்துள்ளவர் இவராவர் (குறு. 151, 295). உழத்தியர் நாற்றுமுடி அழுத்தச் செல்லும் சிறப்பையும் இச் செய்யுள் நமக்கு நயமாக எடுத்துரைக்கின்றது.

தொல்கபிலர் 114

திருவாதவூரினரான கபிலர்க்கு முற்பட்டவர் இவராவர். அவர் குலத்து முன்னோராகவும் கருதலாம். இவர் பாடியன அகம். 282; குறும். 14; நற், 114, 276, 328, 399 என்னும் ஆறு செய்யுட்களும் ஆம். இச் செய்யுளுள்வரும் 'புள்ளித் தொல்கரை' என்னும் உவமை காரணமாக இப் பெயர் வழங்கலாயிற் றென்பார்கள். 'இல்லுறை கடவுட்குப் பலி ஆக்கும்' பண்டை வழக்கம்; மூவேறு தாரமும் மல்கிய தமிழகத்தின் சிறப்பு: மணம் நேர்ந்ததால் தலைவிக்கு உண்டாகும் களிப்பு; மடலேறத் துணிந்தானின் சூளுரை; குறிஞ்சிச் சிறுகுடியின் சிறப்பு; 'குறவர் மகளிரேம் குன்று செழு கொடிச்சியேம்' உரைக்கும் குடிச் செருக்கு; வேங்கை முன்றிற் குறமகளிர் குரவையயர்தல்; 'எண்பிழி நெய்யைப் பண்டை நாளில் பயன்படுத்தியமை' போலும் பல செய்திகளையும் இவரது செய்யுட்களாற் காணலாம். இவற்றுடன் நுட்பஞ் செறிந்த உவமைகளையும் கண்டு இன்புறலாம்.

நக்கண்ணையார் 19, 87

இவர் பெண்பாலர்; பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை எனவும் கூறப்படுவர். வணிகர் மரபினரான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/413&oldid=1711078" இலிருந்து மீள்விக்கப்பட்டது