பக்கம்:நற்றிணை 1.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாடிய சான்றோர்கள்

415


நல் வெள்ளியார் 7, 47

இவர் பெண்பாலர்; அகம். 32, குறு. 365, செய்யுட்களும் இவ்விரண்டு செய்யுட்களுமாக இவர் செய்தவாகக் கிடைத்தன நான்கு செய்யுட்களாகும். 'மறியறுத்து முருகயரும்' குறிஞ்சி நிலத்தாரது இயல்பை இச்செய்யுளால் அறியலாம். இவருடைய அகநானுற்றுச் செய்யுளை ஒரு காதல் நாடகமெனவே கூறலாம்.

நல் வேட்டனார் 58

மிளைகிழான் நல்வேட்டனார் எனவும் இவர் பெயரை வழங்குவர். 'மிளை' என்பது ஓர் ஊரின் பெயராகலாம். களவுறவை அன்னை அறிந்தனளெனக் கூறி இரவுக்குறி மறுத்து வரைவு வேட்பாளாகத் தோழி உரைக்கும் பாங்கிலே அமைந்த சுவையான செய்யுள் இதுவாகும். செல்வத்தினைப் பற்றிய இவரது விளக்கத்தை நற்றிணையின் 210 செய்யுளாற் கண்டு தெளிவடையலாம். மிளை, காவற்காடும் ஆம்.

நற்சேந்தனார் 128

கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார் எனவும் இவர் பெயர் வழங்கும் என்பர்; அவர் வேறு இவர் வேறு எனவும் கூறுவர். குறை நேர்ந்த தோழி தலைவி குறைநயப்பக் கூறியதாக அமைந்த இச் செய்யுள் மிக்க இனிமை செறிந்ததாகும். 'ஏனல் காவலின் இடையுற்று ஒருவன், கண்ணியன் கழலன் தாரன் தண்ணெனச் சிறுபுறங் கவையினனாக, அதற்கொண்டு அஃதே நினைந்த நெஞ்சமொடு இஃதாகின்று யானுற்ற நோயே' என்னும், காதற் செறிவு பெரிதும் நயமுடைத்தாகும்.

நற்றங் கொற்றனார் 136

இவர் பெயர் கொற்றனார் என்பதாகும்; 'நற்றம்' இவரது ஊரின் பெயரெனக் கொள்ளல் பொருந்தும் 'நத்தம்' எனப் பலவூர்கள் இக்காலத்தும் தென்பாண்டிப் பகுதியுள் விளங்கக் காணலாம். 'நத்தம்' என்பது மக்கள் கூடி வாழும் ஊர்ப்பகுதி, தலைவனது பிரிவினாலே தன்னுடல் இளைத்தமைபற்றித் தலைவி கூறுகின்றதாக அமைந்த இச் செய்யுள் அவளது தந்தையது பெருந்தகைமை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/416&oldid=1711592" இலிருந்து மீள்விக்கப்பட்டது