பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3O கூட இருந்து அவர்களுக்கு ஆலோசனை சொல்லிவந்தான். விரைவிலே கட்டடம் முடிக்கப் பெற்றது. அதில் எங்கெங்கு, என்னென்ன வர்ணங்கள் பூசவேண்டும் என்பதையும் அவனே கூறினான். அவ்விதமே வேலையாள்கள் செய்து முடித்தனர். பிறகு, அவன் அரசரைப் பேட்டி கண்டு, எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன: இனி தளவாடங்களை வாங்கி ஹம்மாமை ஆரம்பிக்கலாம்!” என்று தெரிவித்தான். அரசர் பதினாயிரம் தினார்களை அவனிடம் கொடுத்தார். அந்தத் தொகையைக் கொண்டு அவன் குழாய்கள் வாங்கிப் பதித்தான். அவைகளிலே எந்த நேரமும் வெந்நீரும் தண்ணிரும் தனித்தனியாக வருவதற்கு ஏற்பாடு செய்தான். தடாகங்களைப் போன்ற தொட்டி கள் கட்டி, அவைகளிலே நீரைத் தேக்கி,அமிழ்ந்து குளிக்கவும், நீந்தவும் வசதிகள் செய்தான். விதவிதமான நிறங்களில் துண்டுகள் வாங்கி, கொடிகள் கட்டி அவைகளைத் தொங்க விட்டான். முக்கியமான ஓரிடத்தில், பூமிக்குள்ளிருந்து தண்ணீர் பீறிட்டு மேலே வந்து வாணம் பொரிவது போல் சிதறி விழும்படி சலவைக் கற்களால் ஒரு மேடை அமைத்து, அதைச் சுற்றி வண்ண மலர்ச்செடிகள் பலவற்றை அடுக்கி வைத்தான். அரசரிடம் கேட்டு, அவன் திடமான உடல் படைத்த பத்து இளைஞர்களை அழைத்து வந்து, வாசனைத் திரவியங்கள், தைலம், சோப்பு முதலியவைகளைத் தேய்த்துக் குளிப்பிக்கும் முறைகளை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துப் பயிற்சி அளித்தான். கட்டடம் முழுவதும் அகில், சந்தனம் முதலிய கட்டைகளின் நறுமணப் புகை பரவியிருக்கும்படி அவன் ஏற்பாடு செய்தான். பின்னர், நகர் முழுவதும் தமுக்கடித்து விளம்பரமும் செய்யப்பெற்றது. விளம்பரக்காரன், நகர மக்களே! புதிதாக அமைக்கப்பெற்றுள்ள சுல்தானின் ஹம்மாமில் இன்பமாகக் குளித்து, உடல் வலிகள் நீங்கி, பரிசுத்தமாகிச் சுகம் பெறுங்கள்!' என்று தெருத்தெருவாகக் கூவினான். ஹம்மாம் கட்டி முடிந்ததிலிருந்து, பொது மக்கள் திரள் திரளாக வந்து, அதைப் பார்த்துச்சென்றனர். அதிலுள்ள நுணுக்கங்களையெல்லாம் அபு ஸிர் அவர்களுக்கு விளக்கிச் சொன்னான். ஹம்மாமின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.