பக்கம்:நல்லவை ஆற்றுமின்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.வே.சு. ஐயர் தமிழ் இலக்கியப்பணி 93 ஆரியசமாச அமைப்பில் குருகுல முறையில் கல்விக்கூடம் அமைப்பது என்றும் குறிக்கின்றார். எனவே ஐயர் அவர்கள் தமிழ் இலக்கியத்தை வளம்படுத்துவதையே முதற்பணியாகக் கொண்டார் எனத் தெளிதல் வேண்டும். பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே என்ற பாரதியார் பாடிய அடிகளின் முறையிலேயே தாய்மொழியும் தாய்நாடும் இருகண்களென ஐயரால் போற்றப்பெற்றன எனக் கொள்ளல் பொருத்தமாகும். எப்படியாயினும் அந்த நாளில் ஐயர் அவர்கள் கம்பனையும் வள்ளுவரையும் உலகுக்கு மொழி பெயர்த்து வழங்கிய அரிய தமிழ் இலக்கியப் பணியினை நாடு நன்கு அறியும். எனினும் அந்த இருநூல்களும் இன்று தமிழ் நாட்டில் தமிழ் ஆய்வாளருக்கும் பிறநாட்டு அறிஞர்களுக்கும் கிடைக்கா நிலையினை எண்ணி வருந்த வேண்டியுள்ளது. தமிழக அரசாங்கமோ மத்திய அரசாங்கமோ இத்தகைய நூல் மக்களிடை என்றும் கிடைக்கும் வகையில் அச்சிட்டு வழங்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஐயர் தம் இப்பணி உலகுக்கு விளக்கும் வகையில் இப் பேச்சினை ஏற்பாடு செய்த சென்னை வானொலி நிலையத்தைப் பாராட்டு கிறேன். ஐயர்தம் இருபெரு மொழிபெயர்ப்பு நூல்களைத் தொடுமுன் அவர்தம் பிறபணிகளையும் ஓரளவு காணல் ஏற்புடைத்தாகும் என எண்ணுகிறேன். ஐயர் அவர்கள் பத்துக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்தவர். எனினும் அவர்தம் கட்டுரைகளிலும் பிற எழுத்துக்களிலும் தமிழ் மொழியினைத் தவிர்த்து வேற்று மொழிகளைக் கலவாத உயர்ந்த இலக்கியப்பணி அவருடையது. அப்படியே அவர் பேச்சிலும் வேற்றுமொழி விரவியதில்லை என்பர் அறிந்தோர். இந்த நெறியில் அவர் வருங்காலச் சந்ததிகளுக்கு-தமிழ் இலக்கியத்தை வளர்ப்பவருக்கு-ஒரு சிறந்த வழிகாட்டி