பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீறெய்தும் வினையாண்மை 25

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்” -திருக்குறள் : 56

என்றும் மனைமாட்சி வீறெப்திய மனையாளைக் குறிப் பிட்டார். மனைமங்கலம் மாணப்பெற்ற மனைவி, முதற் கண் தன் கணவன்வழி நடத்தலையே தன் தலையாய கடமையாகக் கருதுவாள். கணவன் இனிது செய்யினும், இன்னா செய்யினும் தாய் தன் குழந்தையைக் கோல் கொண்டு அடிக்கும்பொழுது, அக்குழந்தை ‘அம்மா, அம்மா’ என்றே அலறி நிற்பது போல, மனைவியும் கணவன் வழியிலேயே கருத்துடன் நிற்பாள். கணவன் தான் வெறுப்பனவே செய்யினும், தான் அவனை வெறுக்க மனமின்றி அவனை மேலும் விரும்பி வாழ்வாள் பெண்.’ ‘கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானையல்லால் அறியாக் குலமகள்’ என்று பண்புசால் மனைவியைப் பாராட்டிப் போற்றுவர் குலசேகரப் பெருமாள். இவ்வாறு மனைவி வாய்த்து விட்டால் மனைவாழ்க்கை பீடும் பெருமையும் எய்துதல் திண்ணம்.

ஆனால் கைபிடித்த மனைவி ஒருத்திக்குப் பொருள் வேட்கை மிகுகிறது. பொருளற்றவரைப் பொருளாகச் செய்யும் பொருளை நனிவிரும்புகிறாள். அப்பொருள் இப்படித்தான் வரவேண்டும் என்று கருதாமல் எப்படியும் வந்து தீர வேண்டும் என்று அவள் கருதுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது அவளுக்குத் தன்னலம் மிகுந்து, அறவழியிற் செல்லும் பற்றுப் படிப்படியே குறையக் காணலாம். அந்த நேரத்தில் அவளை மணந்த கணவன் உள்ளத்தில் மனைவியா, பொதுக் கடமையா என்ற போராட்டம் எழுகின்றது. அப்போராட்டத்தில் அவன் மனைவி மேற்கொண்ட காமம் வெற்றி பெற்று