பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

'வைகறைத் துயிலெழு' என்பது ஆன்றோர் அறிவுரை. "He would lay down with the lamp and rise with the lark" என்பது ஆங்கில அறிஞர் வழங்கிய அறிவுரையாகும். வைகறை நேரத்தில், வையத்து உயிர்களை வாழவைக்கும் இறைவனுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாடுவது தமிழ் மரபு. சிறப்பாக மார்கழித் திங்களில் மணிவாசகப் பெருந்தகை யின் திருவெம்பாவையினையும், சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாம் ஆண்டாளின் திருப்பாவையினையும் ஓதுதல் தமிழ்நாட்டில் தொன்று தொட்டே நிலவிவரும் வழக்காக இருந்துவருகிறது.

அனைத்திந்திய வானொலி நிலையத்தினரும் தங்கள் அன்றாட நிகழ்ச்சியின் தொடக்கமாக ' அருள் வாக்கு' எனும் நிகழ்ச்சியினை, மங்கல இசையினை அடுத்து வைத்து வருகிறார்கள். தமிழ் இலக்கியம் பக்தி இலக்கியம் என்று பிற நாட்டினரும் பிற சமயத்தினரும் பாராட்டப்பெறும் தகுதி வாய்ந்தது.

நாயன்மார்களும் ஆழ்வார்களும் திருவள்ளுவரும், திருமூலரும், தாயுமானார், வள்ளலார் முதலான சான்றோர்களும் கால் தரைதோய் நடந்த திருவிடம் நம் தமிழகமாகும். இத்தகு சான்றோர் பெருமக்கள் அருளிய நல்லுரைகள், நம் வாழ்வைச் செம்மைப்படுத்தித் துலக்க முறச் செய்யும் சீர்த்தியும் தகவும் வாய்ந்தனவாகும்.

உடல் தூய்மைக்கு நீரில் குளித்து எழுகிறோம். அது போன்றே உள்ளத்தூய்மை பெறச் சான்றோர் சாற்றிய சால்புரையில்- நல்லோர் நவின்ற நல்லுரையில் மூழ்கிக் குளிக்க வேண்டும் என்பர் சான்றாண்மைக்கு ஆழி. எனத் துலங்கிய மு.வ. அவர்கள் .

திருவள்ளுவர் முதலாகக் காந்தியடிகள் ஈறாகப் பெரு மக்கள் பலர் வழங்கிய அருளுரைகள்-அனுபவ உரைகள் • நல்லோர் நல்லுரை' என்ற தலைப்பில் ஈண்டு நூல் வடிவந் தாங்கி வெளிவருகின்றது.

இந்நூல் தமிழ்ச் சமுதாயத்தின் உயர்விற்கு- குறிப்பாக --இளைஞர் சமுதாயத்தின் எழுச்சிக்குப் பெருந்துணை புரியும் என்னும் நம்பிக்கையோடு இந்நூலினைத் தமிழ் கூறு நல்லுலகிற்குப் படைக்கின்றேன்.

‘தமிழகம்’ சி. பா.

சென்னை -29