பக்கம்:நல்லோர் நல்லுரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நல்லோர் நல்லுரை

வேம்பு கசக்கும் பண்புடையது; அதன் இலையும், பூவும், காயும், பழமும் கசக்கும் இயல்பு கொண்டவை. தமிழ் நாட்டுத் தலையாய முக்கணிகளில் ஒன்றாகப் பேசப் படும் வாழை இனிமை சான்றது; தோலையுரித்துவிட்டுத் தின்றால் தெவிட்டாத தெள்ளமுதனைய சுவைதரக் கூடியது. அத்தகைய வாழைப்பழம், கசக்கும் இயல்புடைய வேப்பிலைக்குள்ளேயிருந்து பழுத்தாலும், வாழைப்பழம்’ தனக்கேயுரிய இனிய சுவையினின்றும் சிறிதும் மாறுபடுவ தில்லை. இதனை இன்றும் நடைமுறை வாழ்வில் சோதனை செய்தும் காணலாம். அதுபோலவே, நற் குணமுடையோர் இனமாக, நட்பாக, தொடர்பாகச் சேர்ந்திருக்கும் கூட்டம் தீயதாக இருந்தாலும், அதனால் ஒரு நாளும் அவர்கள் மனம் திரிந்து மாறுவது இல்லை.

இனிய வாழைப்பழத்தைச் சுற்றி இன்னாத - கைப்புச் சுவை பொருந்திய வேப்பிலை யிருந்தாலும், அது எவ்வாறு தன் கசப்புச் சுவையினை வாழைப்பழத்தில் ஏற்ற இயலாமற் போகின்றதோ, அதுபோலவே நற்குண முடையார் சிற்றினத்தாரோடு சேர்ந்திருந்தாலும் சிற்றினத்தார் அவர்களைத் தம்பால் இழுத்து அவர்கள் குணத்தை மாற்றும் இயல்பு அற்றவராவர். ஏனெனில் எவ்வளவுதான் நற்குணமுடையோர் புறத் தோற்றத்திற் காணும்போது சிற்றினத்தாரோடு நெருங்கிச் சேர்ந்திருப் பவராகத் தோன்றினாலும் அதனால் அவர்களுக்கென்று இருக்கும் நற்குண நல்லியல்புகளைத் துறக்கமாட்டார்கள். இஃது உறுதி.

உவமைகள் பாடலின் உட்பொருளை, கருக்கருத்தை விளக்கப் பிறந்தனவாகும். உவமையின் ஒளிக்கதிர்கள் புலனாக்கும் உண்மைகள் பல. அறிவுக் கண்களின் ஒளிப் பாய்ச்சல் எந்த அளவிற்குச் சிறந்திருக்கின்றதோ அந்த அளவிற்கு உவமைகளின் ஒளிக்கதிர்களும் உண்மைகளை ஊடுருவி விளக்கக் காணலாம்.