பக்கம்:நல்ல தீர்ப்பு, பாரதிதாசன்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசன்

25


காட்சி 2

அறமன்றம் : பிறை நாட்டரசர் வயவரி மன்னர் பெருந் தவிசில் வீற்றிருந்தார் இடப்புறமாக, வழக்கெடுத்துரைப்போன் வளன் அமர்ந்திருந்தான் வலப்புறமாகக் குறிப்பெடுக்கும் கொன்றை அமைந்திருந்தான், எதிரில் முன் வரிசையில், இளவரசி முல்லையும், அமைச்சன் மகள் சாலியும் இருந்தனர். பின்வரிசையில், அமைச்சு வல்லுளி உட்கார்ந்திருந்தான். தாழை, தோரை ஒரு புறம் காணுமாறு வந்திருந்தனர். கிள்ளை குற்றவாளியாக அரசர்க்கு முன் நின்றிருந்தாள் காவலர் பணியாளர் பலர் பல பக்கங்களிலும் நின்றிருந்தனர். பெருமக்கள் பலர் காணுமாறு போந்திருந்தனர்.

பேரரசு எழுந்து

அறமன்றத்தைத் துவக்கம் செய்தேன். நடு நிலை கோணாது தீர்ப்பளிப்பதாய் உறுதி கூறுகிறேன்.

வழக்கெடுத்துரைக்கும் வளன் கூறினான் :

பிறைநாட்டின் பேரரசியார் கன்னல் அம்மையாரின் மாணிக்கக் கணையாழி காணாமற் போயிற்று. அதைக் கிள்ளை என்னும் இவள் - படைத்தலைவர் மாழையின் மகள் களவு செய்ததாகப் பேரரசியர் நினைக்கிறார்கள். இவ் வழக்கின் சான்றினராக இளவரசியார் முல்லையும், அமைச்சர் மகள் சாலியும் அழைக்கப்பெற்றுள்ளார்கள். மன்றில் கூடியுள்ளவர்கள் இவ் வழக்கில் உதவி செய்யும்படியும் கேட்டுக்

கொள்ளப்படுகிறார்கள்.

அரசு : கிள்ளையே, அறமன்றத்தின் முன் மெய் கூறுவதாக நீ உறுதி கூறு.