பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



துன்பமும் துடிப்பும்

ரு மனிதனுக்குக் காலிலே புண் வந்தது. வலி தாங்க முடியாமல் கால் வருந்தியது. அதனால் நடக்க முடியவில்லை. கால்படும் துயரத்தைக் கண்டு கண்கள் வருந்தின. வருந்திக் கலங்கின. கலங்கிக் கண்ணீர் வடித்தன.

மற்றொரு முறை கையிலே தீச்சுட்டுவிட்டது. கை உதறி உதறித் துடித்தது. அதைக் கண்ட போதும் அந்தக் கண்கள் வருந்தின. வருந்திக் கலங்கின. கலங்கிக் கண்ணீர் வடித்தன.

அதே மனிதனுக்கு முதுகிலே பிளவை வந்தது. துன்பங்கள் அடுத்தடுத்து ஒருவனையே வந்து வாட்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது அந்த மனிதனைப் பொறுத்த வரையில் உண்மையாயிற்று.

முதுகிலே பிளவை வந்ததால் முதுகால் தாங்க முடியவில்லை. சாயவும் முடியாமல், படுக்கவும் முடியாமல், முதுகு மிக மிகத் தொல்லைப்பட்டது. தம் பார்வைக்குத் தென்படாத முதுகுக்கு வலி வந்த போதிலும் கண்கள் வருந்தின. வருந்திக்கலங்கின. கலங்கிக் கண்ணரீர் வடித்தன.