பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 நல்வழிச் சிறுகதைகள்

பிள்ளைகளின் போக்கை நன்குணர்ந்த மதியமைச்சர் இந்நோக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் நாடு சீர் குலைந்து விடும் என்றே கருதினார்.

அரியநாதன் கையில் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்து, வடுகநாதனை அவன் கீழ் பணி புரியும்படி செய்ய வேண்டும் என்று மதியமைச்சர் ஆலோசனை கூறினார். இந்த ஆலோசனையை அரசர் ஏற்றுக் கொண்டார். மூத்தவனாகிய அரியநாதனுக்கு முடி சூட்டுவது பொருத்தம் என்று தான் அவர் எண்ணினார்.

சமமாகப் பிரித்துக் கொடுத்தாலே சண்டைக்கு வரக்கூடிய வடுகநாதன், இந்த முடிவையறிந்த போது மிகுந்த ஆத்திரம் கொண்டான். அன்றே அரியநாதனைக் கொன்று விடுவதாகக் கூறி ஆர்ப்பரித்தான்.

அரியநாதன் தன் நண்பர்கள் சிலருடன் வேட்டைக்குச் சென்றிருந்தான். வடுகநாதன் நூறு ஆயுதம் தாங்கிய வீரருடன் வேட்டைக் காட்டை வளைத்துக் கொண்டான். இச்செய்தியைக் கேள்விப் பட்ட அரசர், அன்றே மனமுடைந்து இறந்து போனார். அரியநாதன் தன் நண்பர்களின் உதவியால் வேட்டைக் காட்டிலிருந்து தப்பி விட்டான்.

அரண்மனைக்கு வந்த அவன், அரச பதவி ஏற்றான். தம்பி வடுகநாதனை நாடு கடத்தி விட அப்போதே ஆணையிட்டான்.