பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 நல்வழிச் சிறுகதைகள்

சுரந்தது ஒன்றே போதும். உங்கள் தம்பியை உங்களிடம் சேர்க்க, அந்த அன்பே துணை புரியும். நாளையே நான் புறப்படுகிறேன். விரைவில் உங்கள் தம்பியை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன்” என்றான் அந்த மலை நாட்டு வீரன்.

அவன் கூறியபடி மறுநாளே அங்கிருந்து புறப்பட்டான். வடுகநாதனுடைய போர்க் கூடாரத்தில் அவனைப் போய்ச் சந்தித்தான். தன் திறமைகளைக் காட்டி அவனிடம் ஒரு போர்ப் படைத் தலைவனாக வேலையில் சேர்ந்து கொண்டான். பழகப் பழக வடுகநாதனுக்கு அந்த மலைநாட்டு வீரனை மிகவும் பிடித்திருந்தது.

ஒரு நாள் வடுகநாதன் போர் வீரர்களின் கூடாரங்களின் ஊடே பொழுது போக்க நடந்து சென்று கொண்டிருந்தான். ஒரு கூடாரத்தின் அருகே வந்த போது, அங்கு சில வீரர்கள் கூடி யிருந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சு வடுகநாதன் கவனத்தை ஈர்த்தது.

“அந்த மலை நாட்டு வீரன் வந்து இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் நம் தலைவர் அவனிடம் உறவு கொள்ள ஆரம்பித்து விட்டாரே !” என்றான் ஒரு வீரன்.

“வேலைக்கு வந்தவனைப் போலவா நடத்துகிறார் ! தன் தம்பி போலல்லவா நடத்துகிறார் !” என்றான் மற்றொரு வீரன்.

“தம்பி போல நடத்துகிறார்!” என்ற சொற்கள் வடுகநாதன் மனத்தில் ஆழப் பதிந்தன.