பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எலி வேட்டையும்
புலி வேட்டையும்

ர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் சின்னத்தம்பி. இன்னொருவன் பெயர் பெரியதம்பி. இருவரும் உயிர் நண்பர்கள்.

சின்னத்தம்பி ஒரு குயவனிடம் வேலை பார்த்து வந்தான். பெரியதம்பி ஒரு கொல்லனிடம் வேலை பார்த்து வந்தான். குயவன் கொடுத்த கூலி சின்னத்தம்பிக்குப் போதாமல் இருந்தது. அதனால் அவன் கூட ஒரு தொழில் பார்த்து வந்தான். அந்தத் தொழில் என்னவென்றால், எலி பிடிப்பதுதான். கொல்லன் கொடுத்த கூலி பெரியதம்பிக்குப் போதவில்லை. ஆனால், அவன் பார்ப்பதற்கு வேறு தோதான தொழில் எதுவும் அமையாததால், கிடைத்ததைக் கொண்டு மன நிறைவுடன் வாழ்ந்து வந்தான்.

அந்த ஊரில் எலித் தொல்லை அதிகம். எலிகளைப் பிடிப்பதற்கு அக்காலத்தில் எலிப் பொறிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், ஊர் மக்கள் சின்னத்தம்பியின் உதவியையே நாட வேண்டியிருந்தது.