பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 நல்வழிச் செல்வம்


துன்பம் மிகுந்த வயிறே! உன்னோடு வாழ இனி என்னால் முடியாது. ஒருநாள் உணவை விட்டு இரு என்றால் இருப்பதில்லை. இரண்டு நாள் உணவை ஏற்றுக்கொள் என்றால் அதையும் ஏற்றுக் கொள்வதில்லை. நான் உனக்காகப் படுகின்ற துன்பத்தையும் நீ ஒரு நாளும் அறிந்து கொள்வதில்லை. உன்னோடு வாழ்வதே தொல்லையாக இருக்கிறது. நான் என்ன செய்ய? (41)

ஆற்றங்கரையில் செழித்து வள்ர்ந்து நிற்கும் நீண்ட மரமும், அரசர் அறியச் சிறந்து வாழ்கின்ற வாழ்வும் ஒரு காலத்தில் வீழ்ச்சியுற்றுவிடும். உழுது உண்டு வாழும் வாழ்வே ஒருநாளும் வீழ்ச்சியுறாத வாழ்வாகும். அதற்கு ஒப்பான பழுதற்ற தொழில் வேறு எதுவும் இல்லை. (42)

நல்வழியில் நடந்து நல்வாழ்வு வாழ விரும்புகிறவர்களைத் தடுப்பவர்களும், இறக்க விரும்புபவர்களைச் சாகாமல் தடுப்பவர்களும், இரந்துண்டு வாழ விரும்பிச் செல்பவர்களைத் தடுப்பவர்களும், இவ்வுலகில் உண்மையாகவே எவருமில்லை.

                        (43)

பிறரிடம் சென்று இச்சகமாகப் பேசி பொருள்பெற்று வாழ்கின்ற வாழ்வானது, இரந்துண்ணும் வாழ்வைவிட இழிந்த வாழ்வு ஆகும். வயிறு வளர்ப்பதற்காக என்று இத்தகைய இழிந்த வாழ்வு வாழ்வதைவிட, மானமழியாமல் உயிரைவிட்டு விடுதல் மிகவும் சிறந்ததாகும். (44)

இறைவனை நினைந்து தவறு செய்யாமல் வாழ்ந்து வருபவர்களையும், ஒருக்கால் தவறு நேர்ந்துவிட்டாலும் அதற்காக வருந்திக் கண்ணீருகுத்து இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு வாழ்பவர்களையும், தீவினை ஒன்றும் செய்யாது. இதுவன்றித் தவறுகளைச் செய்துகொண்டே இருப்பவர்களின் வாழ்வை அத் தீச்செயல்களே சுட்டு அழித்து விடும். (45)