பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 நல்வழிச் செல்வம்

இழுக்குள்ள பாட்டைவிட இசை மட்டும் நல்லது. உயர் குலம் பேசுவதைவிட ஒழுக்கமே நல்லது. குற்றமுள்ள வீரச் செயலைவிடக் கொடுநோய் நல்லது. பழிக்கு அஞ்சாத மனைவியோடு வாழ்வதைவிடத் தனித்திருந்து சாவது நல்லது. (61)

செல்வம் நிலைபெற்றதல்ல. அது ஆறு இடுகின்ற மேடும், மடுவும்போல அடிக்கடி மாறும் தன்மையுடையது. சோறும், நீரும் இரப்பவர்க் கீயும் உள்ளத்தைப் பெறுவது நல்லது: பெற்றால், அது என்றும் தாழாமல் உயர்ந்து நிற்கும். (62)

யானையின் உடலிலே பாய்கின்ற அம்பினால் பஞ்சுக் குவியலிலே பாயமுடியாது. அதுபோலக் கடுஞ்சொற்களானது இனிய சொற்களை வெல்லாது. ஆனால், இனிமையான சொற்கள் கடுமையான சொற்களை வென்றுவிடும். ஆம். இரும்பினாற் செய்த கடப்பாரைக்குப் பிளவுபடாத கருங்கற் பாறை, பசுமரத்தின் வேருக்குப் பிளவுபட்டுவிடும். (63)

கல்வியறிவு இல்லாவிடினும் பொருள் மிகுந்துவிடுமானால், பலரும் அவனிடம் சேர்ந்து போற்றிப் புகழ்ந்து கொண்டிருப்பர். பொருள் இழந்த ஒருவனைக் கட்டிய மனைவியும் விரும்பாள். பெற்ற தாயுங்கூடப் பொருட்படுத்த மாட்டாள். அவன் வாய்ச் சொல் எவரிடமும் செல்லுபடி யாவதில்லை. (64)

ஆல மரமும், அத்தி மரமும் பூக்காமலே காய்ப்பது போல, ஏவாமலே அறிந்து செய்யும் மக்களும் சிலர் இருக்கின்றனர். நன்றாக உழுது எருவிட்டு விதைத்தாலும் முளைக்காத சில விதைகளைப் போல, இடித்திடித்துச் சொல்லி உணர்த்தினாலும் உணராத மக்களும் சிலர் இருக்கின்றனர். (65)