பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 நல்வழிச் செல்லம்

முத்துச் சிப்பி கருக் கொள்ளும்பொழுதே அழியத் தொடங்குகிறது. மூங்கில் முத்தை விளைக்கும் பொழுதே அழியத் தொடங்குகிறது. வாழை மரம் குலையை ஈனும் பொழுதே அழியத் தொடங்குகிறது. அயல்மாதர்மீது மனம் வைக்கும் பொழுதே மக்களின் கல்வி, அறிவு, பொருள், மானம், மரியாதை ஆகிய அனைத்தும் அழியத் தொடங்கி விடுகிறது. (66)

'ஊழ்வினையை வெல்வதற்கு வேதமுதலான நூல்களில் வழி ஒன்றும் காணப்படவில்லையே' என நெஞ்சே நீ கவலைப்படவேண்டாம். ஏனெனில், உயர்ந்த நெறியில் நிமிர்ந்து நடப்பவர் சிறந்த பலனை விரைந்து பெறுவர். அவரை ஊழ்வினை எதுவும் செய்துவிடாது. (67)

நாணல் புல்லை அறுத்தவர்கள் நாணற் புல்லைக் கொண்டே அதைக் கட்டுவர். அது புல் என்றும், கயிறு என்றும் தோன்றாமல் இரண்டற ஒன்றாகவே தோன்றும். அதுபோல, மக்களும் பிறவியால் உயர்வு தாழ்வு கருதாமல் மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து வாழ்ந்தாக வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதவர்களால் இறைவனைச் சேரவும் இயலாது. (68)

முப்பது ஆண்டுகளாகியும் ஒருவனுக்கு அவன் கற்ற கல்வியின்படி நடந்தொழுக முடியாதிருக்குமானால், அவன் கற்ற கல்வியால் அவன் பெற்ற பயன் என்ன? அவனால் பிறருக்கும் பயன் என்ன? ஒன்றுமிராது என்பது மட்டுமல்ல; அவன் மூப்பிலும் பயன் பெறமுடியாது. (69)

திருக்குறளும், திருமறை முடிவும், தேவாரமும், திருக்கோவையும், திருவாசகமும், திருமூலர் திருமந்திரமும் ஆகிய நூல்கள் மக்கள் நன்னெறியில் நடந்து இறைவனைச் சேர வேண்டும் என்ற ஒரே வாசகத்தைக் கூறுவன என்று உணர வேண்டும். (70)