பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

மூதுரை முத்து

கருங்கல் தூண் தாங்க முடியாத சுமையைத் தாங்க நேரிடுமானால், அது பிளந்து உடைந்து போகுமேயல்லது தளர்ந்து வளைந்து காட்டுவதில்லை. அதுபோல, தாங்க முடியாத மானக்கேடு ஒன்றைத் தாங்க நேரிடுமானால் தன்மையுடையோர் நெஞ்சம் பிளந்து உயிரை விடுவரே யன்றிப் பகைவர் முன்னே வணங்கிக் குனிவதில்லை.

(6)

ஆம்பல் மலர் தான் இருக்கின்ற நீரின் அளவே உயரும். அதுபோல, ஒருவனுடைய அறிவு, அவன் கற்ற நூலின் அளவே உயரும். ஒருவனுடைய செல்வம் அவன் செய்த முயற்சியின் அளவே அமையும். ஒருவனது குணம் அவனைச் சூழ்ந்துள்ள மக்களுக்குத் தக்கவாறே அமையும்.

(7)

நல்லவனாக வாழ்வதுதான் நல்லது என எண்ணிவிடாதே. நல்லவர்களைக் காண்பதுகூட நல்லது. நல்லவர்களின் சொற்களைக் கேட்பதுகூட நல்லது. நல்லவர்களோடு கூடி வாழ்வதும் நல்லது. இவை மட்டுமல்ல; நல்லவர்களைப் பற்றிப் பிறரோடு பேசிக்கொண்டிருப்பதுங்கூட நல்லது.

(8)

தீயவனாக வாழ்வது மட்டும் தீது என எண்ணிவிடாதே. தீயவர்களைக் காண்பதுகூடத் தீது, தீயவர்களோடு பேசுவது கூடத் தீது, தீயவர்களோடு கூடி வாழ்வதும் தீது. இவை மட்டுமல்ல; தீயவர்களைப்பற்றிப் பிறரோடு பேசிக்கொண்டிருப்பதுங்கூட தீமை தரும்.

(9)

உழவன் நெல் வளர்வதற்கு மட்டுமே நீர் இறைக்கிறான். ஆனால், அது புல் வளர்வதற்கும் பயன்பட்டு வருகிறது. அதுபோல, பொழிகின்ற மழையானது நல்லவர்களின் வாழ்விற்கு மட்டும் பயன்படுவதில்லை; மற்றவர்களின் வாழ்வுக்கும் அது பயன்பட்டு வருகிறது.

(10)