பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

நவகாளி யாத்திரை


மூங்கில் படகு ஏறி, மோட்டார் ஏறி, மாட்டு வண்டி ஏறிக் கடைசியில் ஒருவிதமாக வங்காளி நண்பர் சொன்ன ஸோணாய்முரி என்ற கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அந்தக் கிராமத்திலிருந்து மகாத்மாஜி இருக்குமிடத்துக்குப் பத்து மைல் தூரம் என்றும், அந்த இடத்துக்கு வண்டிப்பாதை கிடையாதென்றும், நடைபாதைதான் உண்டு என்றும் தெரிந்துகொண்டேன். எனவே, தன்னந்தனியாக நவகாளி ஜில்லாவில் தோப்புகளும் துரவுகளும் நிறைந்த பயங்கரச் சூழ்நிலையில் களிமண் வரப்புக்களால் அமைந்த கொடி வழியைப் பின்பற்றி மகாத்மா இருக்கும் திக்கு நோக்கி ஏகாந்தமாகப் பிரயாணம் செய்யும்படி ஆயிற்று.

தீக்குச்சிச் சம்பவம்

போகும் வழியில் என்னை அறியாமல் என் உள்ளத்தில் பீதி குடிகொண்டது. சில மாதங்களுக்கு முன்னால் அந்தப் பிரதேசத்தில் நடந்த பயங்கரப் படுகொலைகளும், மிருகப் பிராயமான நாச வேலைகளும் ஞாபகத்திற்கு வந்தன. தூரத்தில் அங்கங்கே எரிந்து சாம்பலான கொள்ளிக் கட்டைகளுடன் காட்சியளித்த சில குடிசைகள் வேறு மேற்படி சம்பவங்களுக்கெல்லாம் சாட்சியம் கூறின. மனித சஞ்சாரம் அவ்வளவாகக் காணப்படவில்லை. வெகு நேரம் கழித்து, வெகு தூரம் சென்றதும் எதிரே ஓர் ஆஜானுபாகுவான முரட்டு மனிதன் தென்பட்டான். அவன் கையிலே அரிவாள் ஒன்று இருந்தது. அவனைக் கண்டதும் என்னுடைய இருதயம் 'படக்படக்' கென்று அடித்துக் கொண்டது. அவன் என்னை நெருங்கி வர வர