பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

நவகாளி யாத்திரை


செல்லும்போது நாம் மட்டும் செருப்புடன் நடந்து செல்வதா? என்று ஒர் எண்ணம் உண்டாயிற்று. தட்சணமே என்னுடைய காலிலிருந்த செருப்புக்களைக் கழற்றிக் கையிலிருந்த கித்தான் பைக்குள் போட்டுக் கொண்டேன். (என்னுடைய செருப்புக்களில் ஒன்று அந்தச் சமயம் அறுந்து போயிருந்ததென்பதையும், அது என்னுடன் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியிருந்தது என்பதையும் நேயர்களுக்குக் காதோடு சொல்லி வைக்கிறேன்!) 

வாபஸ் ஆனார்!

போகும் வழியில் "மகாத்மாஜி ஏன் செருப்பு அணிவதில்லை?" என்று நண்பர் மாணிக்கவாசகம் அவர்களிடம் விசாரித்தேன்.

"மகாத்மாவிடம் பரமபக்தி கொண்ட பஞ்சாபி ஸோல்ஜர் ஒருவர் ஒரு முறை மகாத்மாஜியைத் தரிசிப்பதற்காக நவகாளிக்கு வந்திருந்தார். காந்திஜி வெறுங்காலுடன் யாத்திரை செய்கிறார் என்ற செய்தியைப் பத்திரிகைகளிலே படித்த அந்த நண்பர் மகாத்மாவின் உபயோகத்துக்கென்று கையோடு ஒரு ஜதை மிதியடிகளையும் வாங்கி வந்திருந்தார். அந்தப் பாதரட்சைகளை மகாத்மாவிடம் தந்து, "தாங்கள் இதை அணிந்துகொள்ள வேண்டும். இது தங்களுக்கு நான் இடும் அன்புக் கட்டளை" என்று கூறினார்.

காந்திஜி சிரித்துக்கொண்டே, "ஏன்?" என்று கேட்டார்.

"தாங்கள் இந்தத் தேசத்தின் நாற்பது கோடி மக்களுக்கும் பொதுச் சொத்து. தங்களுடைய வயோதிக