பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

நவகாளி யாத்திரை


படித்துவிட்டு அதற்குப் பதிலும் கூறினார். அது வருமாறு:

"என்னுடைய அந்தரங்க வாழ்க்கையில் சந்தேகம் கொண்ட ஒருவர் என்னுடைய பிரம்மசரிய வாழ்க்கையில் அவநம்பிக்கை தெரிவித்திருக்கிறார். நான் எப்போதும் ஸ்திரீகளுடன் நெருங்கிப் பழகுகிறேன் என்றும், அதனால் அவருக்குச் சந்தேகமாயிருக்கிறதென்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். இவரைப்போலவே இன்னும் சிலரும் என்மீது சந்தேகம் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். எனக்கு அந்தரங்கம் என்பது எதுவும் கிடையாதாகையால், இந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டியது என்னுடைய கடமை.

"கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நான் பிரம்மசரியத்தைக் கடைபிடித்து வருகிறேன். ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டு வருகிறேன். நாவுக்கு ருசியான பண்டங்களைச் சாப்பிடுவது கிடையாது. உயிர். வாழ்வதற்கு எவ்வளவு ஆகாரம் அவசியமோ, அதைவிடக் குறைவாகவே சாப்பிட்டு வருகிறேன். என்னுடன் எந்த நேரமும் பெண்கள் இருந்து வருவது உண்மையே. பெண்களின் அருகிலேயே இருந்தும் பிரம்மசரியத்தைக் காப்பது தான் உண்மை யோகியின் லட்சணம்.

"காட்டிலேயே உள்ள ஒருவன் நான் ஜிலேபியே சாப்பிடுவது கிடையாது" என்றால் அதில் ஆச்சரியம் கிடையாது. ஏனெனில், காட்டிலே ஜிலேபி கிடைக்காது. ஆகையால், கிடைக்காத ஒரு பொருளைச் சாப்பிடுவதில்லை என்று சொல்லுவது ஆச்சரியமாகாது.